பக்கம் : 892 | | (இ - ள்.) மருங்கவை புணர்த்த பின்னர் - பக்கத்தே அம் மாயத் தொழில்களைச் செய்த பின்னர், வானக வளாக மெல்லாம் - விசும்பு வட்டம் முழுதையும், அகன்ற கருங்கல் ஒன்று - அகலிதாய கரிய மலை ஒன்றனாலே மேலால் கவித்தது - மேற்புறத்தே குடைபோன்று கவித்தது, கவித்தலோடும் - அவ்வாறு கவிழ்த்தவுடனே, இருங்கலி உலகம் எல்லாம் - பெரிய ஆரவாரத்தையுடைய இவ்வுலக முழுதும், இருள்கொள - பேரிருள் கவ்விக்கொண்டதாக, வெருவி நோக்கி - அஞ்சி நான்கு பக்கத்தும் நோக்கி, பெருங்கலி அரசர்தானை - பெரிய முழக்கத்தையுடைய திவிட்டனைச்சார்ந்த அரசருடைய படை, போக்கிடம் அற்றது அன்றே - தாம் உய்ந்து போதற்குரிய இடமும் பெறாதாயிற்று, (எ - று.) இவ்வாறு செய்த பின்னர் மீண்டும் அச் சண்டவேகை அகன்ற ஒரு மலையைக் கொணர்ந்து மேலே கவிழ்த்தது ஆதலால் உலகெலாம் இருண்டது. திவிட்டன் படைஞர் உய்ந்து போதற்கு இடமும் பெறாதவராயினர் என்க. | (302) | | திவிட்டன் படை ஓடுதல் | 1433 | வாளொடு வாள்கள் வீழ மைந்தரை மைந்த ருந்திந் தாளொடு தாள்க டாக்கித் தலையொடு தலைகண் முட்டித் தோளொடு தோள்க டேய்ப்பச் சுடரணி சுடர்ந்து சிந்த வாளுடை யரசன் றானை யரவமோ டுடைந்த 1தன்றே. | (இ - ள்.) வாளொடு வாள்கள் வீழ - முன்னர் எறியப்பட்ட வாள்களோடே வீழும்படி தாம் கைக்கொண்ட வாட்படைகளையும் எறிந்து, மைந்தரை மைந்தர் உந்தி - வீரரை வீரர் தள்ளியும், தாளொடு தாள்கள் தாக்கி - கால்களோடு கால்கள் தாக்கப்பட்டும், தலையொடு தலைகள் முட்டி - தலையோடு தலைகள் முட்டவும், தோளொடு தோள்கள் தேய்ப்ப - தோள்களோடு தோள்கள் உறிஞ்சவும், சுடர் அணி சுடர்ந்து சிந்த - ஒளியுடைய அணிகலன்கள் சுடர்வீசிச் சிதறவும், வாளுடை அரசன் தானை - வாட்படையுடைய திவிட்டன்படை, அரவமோடு உடைந்தது அன்றே - பேரொலியோடே புறங்கொடுத்தோடிற்று, அன்றே : அசை, (எ - று.) வீழவும், தாக்கவும், முட்டவும், தேய்ப்பவும் சிந்தவும் திவிட்டன் தானை பெருமுழக்கத்தோடே உடைந்தோடிற் றென்க. | (303) | |
| (பாடம்) 1 வன்றே. | | | | |