பக்கம் : 897
 

     (இ - ள்.) சலத்தினைப் புரிந்த தெய்வம் - வஞ்சவினையியற்றிய சண்டவேகை
என்னுந்தெய்வம், நிலத்திடை நின்று - மண்மேல் நின்றபடியே, வானமுடியுற நிமிர்ந்து -
விசும்பினது முகட்டைப் பொருந்துமாறு வளர்ந்து, கண்ணின் புலத்தினது அளவு நீங்கி -
காட்சியளவைக் கடந்து ஓங்கி, பொம் என உயிர்த்து - பொள்ளெனப் பெருமூச்செறிந்து,
விம்மி - அச்சத்தால் உளம் விம்மி, பிலத்தினது அளவிற் பேழ்வாய் - குகைபோன்ற
பெரிய வாயினிடத்தே, பிறழ்ந்து இலங்கும் எயிற்றது ஆகி - ஒன்றோடொன்று மாறுபட்டு
விளங்குகின்ற பற்களையுடையதாய், தலை பனித்து உடைந்தது அன்றே - தலை
நடுக்கங்கொண்டு அஞ்சி ஓடிப்போயிற்று, அன்று, ஏ : அசைகள், (எ - று.)

     அப் பேய், வானளாவ உயர்ந்து, காட்சிப் புலனையும் கடந்துபோய், அஞ்சிப்
பெருமூச் செறிந்து, மனம் விம்மி, குகைபோன்ற வாயினைப் பிளந்துகொண்டு, பற்கள்
தோன்றத் தலை நடுக்கமுற்று, ஓடிப்போயிற்றென்க.

(310)
 
அச்சுவகண்டன் சினந்து என் யானையைக்
கொணர்க எனல்
1441. தெய்வமாங் குடைந்து தன்பாற்
     படையினைத் திரைத்துக் கொண்டு
மையிரு விசும்பி னேறக்
     கண்டபின் மாற்று வேந்தன்
கையினைப் புடைத்துக் கண்கள்
     சிவந்துவா யெயிறு கவ்வி
வையக நடுங்க நோக்கி
     மழகளி றணைக வென்றான்.
 
     (இ - ள்.) தெய்வம் - சண்டவேகை என்னும் தான் ஏவிவிட்ட தெய்வம், தன்பால்
படையினை - தன் பகுதியிலுள்ள கூளிப்படைகளையும், திரைத்துக்கொண்டு - ஒருசேரத்
திரட்டி உடன்கொண்டு, மையிரு விசும்பின் ஏறக் கண்டபின் - நீல நிறமுடைய பெரிய
வானத்தே உடைந்து ஓடியதைக் கண்டவுடனே, மாற்றுவேந்தன் - பகை மன்னனாகிய
அச்சுவகண்டன், கையினைப் புடைத்து - சினத்தாலே தன் கைகளை ஒன்றோடொன்று
தாக்கி, கண்கள் சிவந்து - கண்களும் சிவந்து, வாய் எயிறு கவ்வி - கீழுதட்டைப் பல்லாலே
அதுக்கி, வையகம் நடுங்க நோக்கி - இவ்வுலகம் முழுதும் அஞ்சி நடுங்குமாறு பார்த்து,
மழகளிறு அணைக என்றான் - என்னுடைய இளமை மிக்க அரசுவா ஈண்டு வருவதாக
என்று பணித்தான், (எ - று.)