பக்கம் : 901
 
     பெய்து எழும் - புதுவதாகச் சிறகுகள் இயற்கையாற் கொடுக்கப்பெற்று வானத்திலே
பறந்து எழாநிற்கும், அதேபோல் - அச்சிதலையின் தன்மையைப் போன்று, கண்ணின் -
ஆராயுமிடத்து, நீயும் - இதுகாறும் உனது புற்றாகிய நகரத்தூடே வாழ்ந்த நீ தானும்,
கருடப்புள் அதனை யேறி - புதிதுவந்த கருடப்பறவையில் ஏறி அதன் சிறகை
நின்னுடையவாய்ப் பெற்று, விண்ணின் ஆறு எதிர்ந்து - வான் வழியே என்னை எதிர்த்து,
வேற்கு இரையாகி - என் வேலுக்கு ஊணாய், வந்தாய் - இறக்கும் பொருட்டு வந்துள்ளனை
யல்லையோ, ஆல் : அசை, (எ - று.)

     சிதலைசேர்தி - சிதலையை ஒக்கின்றாய். திவிட்டனே ! புதுவதாக வந்த கருடனை
ஏறிப் பறந்து, எம்முன்னே வந்து, உயிர்விடப் போகின்ற நீ, தம் வாழ்நாள் எல்லாம்
புற்றினுள்ளே கழித்து, ஒருநாட் புதிதாகச் சிறகு பெற்றுப் பறந்து அன்றே மாயும் ஈயலையே
ஒப்பாய் என்றான், என்க.

 (316)

 
1447. மாறலா மனிதர் தம்மேல் வண்சுட ராழி யானும்
சீறினா னென்ற போழ்திற் சிறுசொலாய் நிற்கு மென்று
தேறினார் மொழிகள் கொண்டு செவிசுடு சொற்கள் கேட்டு
மாறினே னென்ப தோரா 1யளியத்தா யனல்விக் கின்றாய்.
 
     (இ - ள்.) வண்சுடர் ஆழியானும் - வளப்பமிக்க ஒளியுடைய ஆழிப்படை உடைய
அச்சுவகண்டனும், மாறு அலா மனிதர் தம்மேல் - தனக்குப் பகைவராம் தகுதியில்லாத
எளிய மனிதரை, சீறினான் - பொருளாய் மதித்துச் சினந்தான், என்ற போழ்தில் - என்று
உலகம் கூறுமிடத்தே, சிறு சொலாய் நிற்கும் என்று - அச்சொல் எனக்கொரு
பழிச்சொல்லாக உலகிலே நிலைத்து நிற்கும் என எண்ணி, தேறினார் மொழிகள்கொண்டு -
ஆராய்ந்து தெளிந்த அமைச்சர் முதலியோர் சொற்களைப் பேணி, செவிசுடு சொற்கள்
கேட்டும் ஆறினேன் - நின்னாற் கூறப்பட்ட செவியைச் சுடுகின்ற இன்னாச் சொற்களைத்
தூதர் வாயிலாய் யான் கேட்டிருந்தேயும் சினவாது ஆறியிருந்தேன், என்பது - என்னும்
இவ்வுண்மையை, ஓராய் - நீ அறியாதவனாய், அளியத்தாய் - இரங்கத்தக்க எளியனாகிய நீ,
அனல்விக்கின்றாய் - அரிதின் ஆற்றிய என் சினத்தைத் தூண்டா நின்றாய், (எ - று.)

     பேதை மானுடனாகிய உன்னை ஒரு பொருளாக மதித்து உன்னோடு போர்புரிதல்
எமக்கு இழுக்காம், என்று கருதியே, நீ எம்மைக் கூறிய பழிமொழிகளைத் தூதருரைப்பக்
கேட்டும் ஆற்றியிருந்தேம், எனியோங் அவ்வாறு அரிதாக ஆறியிருந்த எம் சினத்தை
நீயே வலிய வந்து தூண்டா நின்றனை ஆதலால் நீ இரங்கத் தக்கவனாகின்றாய் என்றான்
என்க.

(317)


     (பாடம்) 1 யளியற்றாய்.