(இ - ள்.) இப்பால் - இதன்பிறகு; உரை அமைந்து இருப்ப - எல்லோரும் பேச்சொழிந்து இருக்கையில்; ஓது நாழிகை ஒன்றுஓட - சொல்லப்படுகிற நாழிகை ஒன்று நீங்க; முரசம் ஒன்று அதிர்த்தது - நாழிகையைத் தெரிவிக்கும் பேரிகையொன்று அதுகாறும் மெல்லென முழங்கியது அப்பொழுது; ஓங்கி அதிர்தலும் - ஓங்கி முழங்குதலும் அம்முரசொலி கேட்டவளவிலே; முகத்தினாலே அரசு அவை விடுத்தவேந்தன் - தன்முகக் குறிப்பினாலே அவ்வரசவையோரைக் கலைத்த அரசன்; அகத்த நூல் அவரை நோக்கி - உள்ளத்தின்கண் நூலுணர்ச்சி மிக்கவர்களான அமைச்சர்களை ஆராய்ச்சி மன்றத்திற்கு வருமாறு குறிப்பினாலே பார்த்துவிட்டு; வரைஉயர் - மலைபோல் உயர்ந்த; மாடக்கோயில் - மேனிலைமாடத்தையுடைய அரண்மனையிலே உள்ள; மந்திரசாலை சேர்ந்தான் - ஆராய்ச்சி மன்றத்தை அடைந்தான். (எ - று.) குறிகாரனாகிய அங்கதன் உரையைக் கேட்ட அரசன், முகப் பார்வையால் அவையைக் கலைத்துவிட்டான். கலந்தெண்ணுதற்குரிய அமைச்சர்களை அதற்குரிய இடத்தையடையுமாறு குறிப்புக்காட்டினான். தானும் மறைமுக ஆராய்ச்சி மன்றத்தை அடைந்தான். மன்னர்கள் மாளிகையில் காலம் உணர்த்தும் முரசம் அடிக்கப்படுதல் மரபு. முரசம் ஓங்கியதிர்தற்குக் காரணம் அரசவை கலைதற்குரிய காலம் வந்துற்றதென்றுணர்த்துதலாம். |