பக்கம் : 911
 

     (இ - ள்.) கழலவன் - வீரக்கழலணிந்த திவிட்டமன்னன், கனன்றுவிட்ட - சினந்து
ஏவிய, கதிர் நகை நேமி போழ - ஒளிச்சுடராற் றிகழ்கின்ற ஆழி மார்பைப் பிளத்தலாலே,
மழகளியானை தன்மேல் - இளமையும் களிப்பு மிக்க தன் அரசயானை எருத்தத்தினின்றும்,
மறிந்து வீழ்கின்ற மன்னன் - குப்புற்று வீழாநின்ற அச்சுவகண்டன், நிழல் அவிர்விலங்கல்
நெற்றி - ஒளிவீசுகின்ற மலையுச்சியின்கண், நிமிர்ந்தது ஓர் காளமேகம் -
வளர்ந்துள்ளதொரு கரிய முகில், அழலவன் திகிரி பாய - கதிரவனுடைய ஒளி வட்டம்
பாய்தலாலே, அற்று வீழ்கின்றது ஒத்தான் - துணிபட்டு வீழ்ந்ததனை ஒத்தான்,
(எ - று.)

     நம்பி ஏவிய ஆழியால் மடிந்து வீழ்கின்ற அச்சுவகண்டன் ஞாயிற்றின் ஒளி
பாய்தலாலே மலையினின்றும் சரிந்து வீழ்கின்ற முகிற் படலத்தை ஒத்தான் என்க.

(332)

 

அச்சுவகண்டன் ஆழியே அவனைக் கொன்றதெனல்

1463. நெறிதலை திரிவி லான்மே னினைவிலான் மொழியப் பட்ட
மறுதலை முடிக்கு மேது 1வாய்வழி யழிப்ப தேபோல்
பொறிதலை மணந்த காளை மேல்வரப் புணர்த்த நேமி
செறிதலை யிலாத மன்னன் றன்னையே செகுத்த தன்றே.
 
     (இ - ள்.) நெறிதலை திரிவிலான்மேல் - தருக்க நெறியிடத்தே மாறுபடுதலில்லாத
ஒரு வாதியின் எதிரே, நினைவு இலான் - அத்தருக்க நூல் நெறியை நன்கு
உணர்தலில்லாத பிரதிவாதி ஒருவன், மொழியப்பட்ட - எடுத்துக் கூறப்பட்ட, மறுதலை -
மறுமொழி, முடிக்கும் ஏதுவாய் - அவ்வாதியின் மேற்கோளை வலியுறுத்தும் ஏதுவாகி, வழி
அழிப்பதேபோல் - தன்னுடைய வாதநெறியை அழித்துவிடுவதைப்போன்று, பொறிதலை
மணந்த காளைமேல் - திருமகளை மணந்துள்ள திவிட்டன்மிசை, வரப்புணர்த்த நேமி -
செல்லவிட்ட அச்சுவகண்டன் ஆழிப்படை, செறிதலை இலாத மன்னன் தன்னையே -
அடக்கமில்லாத அவ்வச்சுவகண்டனையே, செகுத்தது - கொன்று தீர்த்தது, அன்று, ஏ :
அசைகள், (எ - று.)
     தருக்க வாதத்தின்கண் பேசத் தெரியாமையாகிய தோல்வித் தானம், மயங்கப்
பேசுதலும், வாளாவிருத்தலும் என, இருவகைப்பட்டு, விரியான் இருபத்திரண்டாம்.
அவற்றுள், ஈண்டுக் கூறியது தான் எடுத்துக்கொண்ட மேற்கோளைச் சாதிக்கமாட்டாமல்
அதற்குக் கேடு வரப் பேசுதல், என்பதன் பாற்படும். அஃதாவது :- தான் கூறும் ஏதுவே
தனது மேற்கோளை அழித்து, வாதியின் மேற்கோளைச் சாதிப்பதாய் முடிதல். அங்ஙனம்
கூறும் ஏதுவினை ஏதுப்போலி என்ப. இவ்வேதுப்போலியும், மூவகைப்பட்டு விரியான்
இருபத்தொன்றாம். இவற்றினியல்பெல்லாம் தருக்க நூலுட் கண்டுணர்க.
ஈண்டு ஆழிப்படைக்கு உவமை ஏதுப்போலி.

 (333)


(பாடம்) 1 வாகிய, வழிப்ப.