பக்கம் : 913 | | (இ - ள்.) நெருநல் - நேற்று, நெடுங்குடைக்கீழ் - நீண்ட திங்கட்குடையின் கீழே அமர்ந்து, நேமிமுன் செல்ல - தன் ஆழிப்படை தன்னைக் காத்துத் தன் முன்பே செல்லா நிற்ப, பொருநல்வய வேந்தர் - போர்செய்யும் நல்ல ஆற்றலுடைய அரசர்கள், போற்றிசைப்ப வந்தான் - வாழ்ந்தெடுக்குமாறு வந்தனன், செருநன்மற நேமி - போரிடத்தே நல்ல ஆற்றலுடைய ஆழிப்படை, சென்றது - நெருநல் தனக்குத்துணையாய்த் தன்முன் சென்ற அதுவே, போழ - தன் மார்பத்தைப்பிளக்க, எரிபொன் மணிமுடியான் - விளங்குகின்ற பொன்னாலும் மணியாலும் இயன்ற முடியை உடைய அச்சுவகண்டன், இன்று - இற்றை நாள், இவனோ சாய்ந்தான் - இத்தகைய பெருமையுடையோனும் இறந்தொழிந்தான், (எ - று.) யாக்கை செல்வங்களின் நிலையாமை இருந்தவாற்றை உணருங்கோள் என்பது குறிப்பெச்சம். “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு“ (திருக். - 336) என்னும் பொய்யாமொழியை ஈண்டு நினைவு கூர்க. | (335) | | 1466. | தானெறிந்த நேமி தனக்கே 1பகையாகித் தேனெறிந்த தாரான் சிறுவரைக்கண் 2வீடினான் யானறிந்த வாற்றா லெளிய வுலகத்தில் வானறிந்த 3வாழ்க்கையு மாயமே போலுமால். | (இ - ள்.) தான் எறிந்த நேமி - தன் பகைவனைக் கொல்லும் பொருட்டுத் தான் ஏவிய தன்னுடைய ஆழிப்படை, தனக்கே பகையாகி - தன்னையே கொல்லும் பகையாக மாறிவிட, தேன் எறிந்த தாரான் - தேன் துளிக்கும் மலர்மாலையை அணிந்த அச்சுவகண்டன், சிறுவரைக்கண் - சிறியதொரு கால எல்லையினகத்தே, வீடினான் - மாண்டொழிந்தான், யான் அறிந்தவாற்றால் - என்னுடைய சிற்றறிவானே யான் அறிந்து கொள்ளுந்துணை, எளிய இவ்வுலகத்தில் - ஏழ்மையுடைய இம்மண்ணுலகத்தே, வான் அறிந்த வாழ்க்கையும் மாயமே - தேவர்கள் அறியச் சிறப்புற்றமர்ந்த வாழ்க்கையும் பொய்யே ஆயிற்று, போலும் : ஒப்பில் போலி, (எ - று.) மாயவித்தையைப் போன்ற தெனினும் ஆம். “மணி மாடம் மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே வந்ததோர் வாழ்வு மோர் இந்திரசாலக் கோலம்“ என்பர் தாயுமானார். | (336) | |
| (பாடம்) 1 பகையாக. 2 வீட்டினான். 3 வாட்கையு. | | |
|
|