பக்கம் : 914
 
 
1467 வலியு மடுதிறனும் வாழ்வும் வனப்பும்
பொலிவுங் கடைபோகா பூமிமேல் வாழ்வீர்
கலியன்மி னென்றிதனைக் காட்டுவான் போல
மலிபொன் மணிமுடியான் மற்றிவனோ மாய்ந்தான்.
 
     (இ - ள்.) பூமிமேல் வாழ்வீர் வலியும் - இவ்வுலகின் வாழ்வீர்காள் நீயிர் பெற்றுள்ள
உடல் வன்மையும், அடுதிறனும் - பகைவரைக் கொல்லும் பேராற்றலும், வனப்பும் - நீங்கள்
எய்தியுள்ள இளமையும், வாழ்வும் - எய்தியுள்ள வாழ்க்கை வளமும், பொலிவும் -
தோற்றமும், கடைபோகா - கடைசெல்ல நில்லா, கலியன்மின் - ஆதலால் இவையிற்றை
எய்தியுள்ளேம் எனச் செருக்குறாதே கொண்மின், என்று - என்று கூறி, காட்டுவான் போல
- இவ்வுண்மையைத் தன்பாலே வைத்துக் காட்டுகின்றவனைப் போன்று, பொன்மலி
மணிமுடியான் - பொன்மிக்க மணிகள் அழுத்திய முடியுடையனாகிய, மற்று இவனோ - இவ்
வச்சுவகண்டன், மாய்ந்தான் - மாண்டொழிந்தான், (எ - று.)

     வலியும், ஆற்றலும், வாழ்வும், அழகும், தோற்றமும், கடைபோக நிற்கமாட்டா;
ஆதலின், இவற்றைப் பொருளாகக் கொள்ளன்மின் என்று உலகத்தார்க்கு விளக்குவானைப்
போன்று அச்சுவகண்டன் மாண்டான் என்க.
இம்மூன்று செய்யுளும்,

     “கழிந்தோர் தேஎத்து அழிபட ருறீஇ
     ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலை“ (தொல் - புறத். 79)
என்க.

 (337)

 

ஊழ் நிகழ்ச்சி அறியலாகாதெனல்

1468. மாக மழைவண்ணன் மாற்றான்மேல் விட்டெறிந்த
வேக விறலாழி மீட்டே பெயர்ந்துதன்
போக வரைமார்பம் போழ்படுப்பப் பொன்றினான்
ஆகுவ தாமதனை யாவ ரறிகிற்பார்.
 
     (இ - ள்.) மாகம் மழைவண்ணன் - விசும்பின் கண்ணதாகிய முகில்போலும்
நிறமுடைய அச்சுவகண்டன், மாற்றான் மேல் விட்டெறிந்த - தன் பகைவனாகிய திவிட்டன்
மேலே விசைத்து வீசிய, வேகவிறல் ஆழி - விரைந்த செலவினையுடைய வெற்றிச்சக்கரம்,
மீட்டே பெயர்ந்து - மீண்டும் திரும்பி, தன் போக வரை மார்பம் - தனது போகத்திற்குக்
காரணமான மலைபோன்ற மார்பினை, போழ்படுப்ப - பிளந்திட, பொன்றினான் -
மாள்வதானான், ஆகுவது ஆம் - ஊழால் நிகழ்தற்குரிய எச் செயலும் நிகழ்ந்தே தீர்வதாம்,
அதனை - அங்ஙனம் நிகழ்கின்ற செயல்களை, யாரே அறிவர் - முன்னரே
அறிந்துகொள்ளவல்லார் யாரே உளர், (எ - று.)