பக்கம் : 915
 

     “சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
     உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே ஆகும்“

     இஃது ஊழின் இயற்கை; ஊழினது செயலை மானிடர் அறிந்துகொள்ளும் வன்மை
யுடையோரல்லர் என்று இரங்கிய படியாம்.

(338)

 

அச்சுவகண்டன் மனைவியர் போர்க்களம் புகுதல்

1469. இன்னன கண்டார் மொழிந்திரங்கு மாயிடை
அன்ன மனையா ரயகண்டன் தேவிமார்
பொன்னவிர் பூங்குழையார் பொங்கேந் திளமுலையார்
மின்னவிர் நுண்ணிடையார் மேல்வந் தணுகினார்.
 
     (இ - ள்.) இன்னன கண்டார் மொழிந்து இரங்கும் ஆயிடை - இன்னோரன்ன
நிலையாமைகூறி, அச்சுவகண்டன் மாண்டமை கண்டவர்கள் இரங்கும்பொழுது, அயகண்டன்
தேவிமார் - அச்சுவகண்டனுடைய மனைவிமார்கள், அன்னம் அனையார் -
அன்னப்பறவையைப் போன்றவர்களும், பொன் அவிர் பூங்குழலார் - அழகால்
விளங்குகின்ற மலரணிந்த கூந்தலுடையாரும், பொங்கு ஏந்து இளமுலையார் - பருத்துயர்ந்த
இளையமுலையினையுடையாரும், மின் அவிர் நுண்ணிடையார் - கொடிமின் போன்று
ஒளிரும் நுணுகிய இடையுடையாரும் ஆகிய மகளிர்கள், மேல் வந்து - விசும்பாறாக வந்து,
அணுகினார் - அச்சுவகண்டன் வீழ்ந்த விடத்தை அடைந்தனர், (எ - று.)

     இவ்வாறு அச்சுவகண்டன் மாண்டமை குறித்துக் கண்டோர் கூறி இரங்காநிற்ப,
அவன் தேவிமார் விசும்பாறாக வந்து போர்க்களத்தே புக்கனர் என்க.

(339)

 

அச்சுவகண்டன் முதன் மனைவியின் நிலை

1470. வண்டார் மணிமுடியான் மார்பு துணிகிடப்பக்
கண்டாள் பெருந்தேவி கண்டேதன் கைசோர்ந்து
வெண்டாரை வேனெடுங்க ணீர்மூழ்கி மேற்பிறழ
விண்டா ளுயிர்பின்னும் வெற்றுடல மாயினாள்.