பக்கம் : 919 | | (இ - ள்.) குழவி நாயிற்று எழில் ஏய்க்கும் - இளஞாயிற்றின் அழகை ஒத்த, குங்குமம் குழம்பு ஆர்கோலம் மெழுகி - குங்குமச் சேற்றாலே பொருந்த ஒப்பனையமைய மெழுகி, மீது ஓர் மணியாரம் வீசி - மேலே ஒரு மணிவடம் புரண்டு கிடக்கப்பெற்ற, விரை ஆகம் - நறுமணமுடைய நின் திருமார்பு, ஒழுகு குருதிச்சேறு ஆடி - புண்களினின்றும் ஒழுகிய குருதிக் குழம்பிலே முழுகப்பெற்று, ஓடையானை நுதல்மீது - முகபடாமுடைய யானையின் நெற்றிமீது, வழுவி - நழுவி, வீழ்ந்த வகை நாடின் - விழுந்துள்ள தன்மையை ஆராயுமிடத்தே, மறவேந்தே - வீர மன்னனே, மாயம் போலும் - எமக்கு ஒரு மாயவித்தை போலத் தோன்றா நின்றது. (எ - று.) நாயிறு - ஞாயிறு ; போலி. மாயம் - இந்திரசால முதலியன. குங்குமக் குழம்பு நீவி மணியாரம் வீசி இளஞாயிறுபோற் றிகழ்ந்த உன் மேனி, அந்தோ குருதிச் சேறு படிந்து யானை நெற்றியின்மீது வழுவி வீழ்ந்துள்ள நிகழ்ச்சியைக் கருதுங்கால் எமக்கு மாயம்போலத் தோன்றாநின்ற தென்றார் என்க. | (345) | | 1476 | பொன்னி னாய வமளிமேற் பூவி னாய வணைபொருந்தி அன்ன மனையா ரடிவருட வமரும் பள்ளி யமராதே மன்னு மிங்கோர் மதயானை நுதன்மேன் மறிந்து மணிமுடிசாய்த் தென்னு முரையாய் துயில்கோட லிசையோ வெங்கள் பெருமானே. | (இ - ள்.) பொன்னின் ஆய அமளிமேல் - பொன்னாலே இயற்றப்பட்ட கட்டிலின் மேலே. பூவின் ஆய அணை பொருந்தி - மலரானியன்ற படுக்கையிலே இருந்து, அன்னம் அனையார் அடிவருட - அன்னப்பறவை போன்ற இளமகளிர்கள் கால்களை வருடாநிற்ப, அமரும் பள்ளி அமராதே - விரும்புதற்கு ஏதுவாகிய அணை மேலே வீற்றிருத்தல் ஒழிந்து, மன்னும் இங்கு - தலைவனாகிய நீயும் இப்போர்க்களத்தே, ஓர் மத யானை நுதன்மேல் மறிந்து - ஒப்பற்ற மதகளிற்றின் நெற்றியிலே வீழ்ந்து, மணிமுடி சாய்த்து - மணியிழைத்த முடிக்கலன் அணிந்த தலையினைச் சாய்த்துக்கொண்டு, என்னும் உரையாய் - யாதொரு மொழியும் பேசாதாயாய், துயில்கோடல் - இங்ஙனம் உறங்குதல், எங்கள் பெருமானே - எம்முடைய தலைவனே, இசையோ - உனக்குப் புகழ்தான் ஆகுமோ ? புகலாய், (எ - று.) |
| | |
|
|