பக்கம் : 923
 
     உன் பெருந்தேவி மாழ்கி இவ்விடத்தே உயிர் நீப்பவும், உன் வெற்றிமுரசம் பிறர்
வெற்றிகூறி முழங்கவும், உன் நகரச் செல்வம் சிதையவும், நீ இவையிற்றைக்
கண்டும்,சினவாதிருக்கின்றனை; இடியேற்றை ஒப்பானவனே ! நீ இவ்வுலகினைத் துறவியர்
போன்று உவர்த்து ஒழித்தனையோ ! என்று இரங்கினர் என்க.

(350)

 
1481. மூரி முந்நீ ருலகங்கண்
     முழுதுங் காவன் முனிந்தாயோ
ஆரு மில்லா வடியோகங்கள்
     வழிபா டாற்ற மாட்டாயோ
சீரின் மன்னும் வளநாடுந்
     தெய்வப் படையுஞ் செல்வமுநீ
பாரின் மன்னர் பிறர்கொள்ளப்
     பணித்த தென்னோ படைவேந்தே.
 
     (இ - ள்.) மூரி முந்நீர் உலகங்கள் - பெரிய கடல்சூழ்ந்த இவ்வுலகங்கள், முழுதும்
காவல் முனிந்தாயோ - முற்றும் ஓம்பா நின்ற நின் காவற்றொழிலை
வெறுத்தொழித்தனையோ, ஆரும் இல்லா அடியோங்கள் - உன்னைத் தவிரப் புகலாவார்
யாரையும் பெற்றிராத உன் மெய்யடியேமாகிய எளியேங்கள், வழிபாடு ஆற்ற - உனக்கு
வழிபாடு செய்தலை, மாட்டாயோ - ஏற்றுக்கொள்ள மாட்டாயோ, சீரின் மன்னும் வளநாடும்
- சிறப்போடே நிலைபெற்ற உனது வளமிக்க நாட்டையும், தெய்வப் படையும் -
கடவுட்டன்மையுடைய ஆழிப்படையையும், செல்வமும் - பிற செல்வங்களையும், பாரின்
மன்னர் பிறர் பூமியாளும் சிறு மன்னராகிய நின் ஏதிலார், கொள்ள - கொள்ளை
கொள்ளும்படி, நீ பணித்தது - நீ அவர்களுக்குக் கட்டளையிட்ட செயல், என்னோ - யாது
கருதியோ, படைவேந்தே - படைமிக்க அரசனே, கூறுக, (எ - று.)

     நீ உலகங் காத்தற் றொழிலை வெறுத்தனையோ ! உன் அடியேங்கள் வழிபாட்டை
ஏன்று கொள்ளாயோ ! சிறந்த உன் வளநாட்டையும், தெய்வப் படையையும்,
செல்வத்தையும் உன் பகைவர் கொள்ளை கொள்ள விட்டுவிட்டதன் காரணம் யாதோ?
கூறாய் என்றார் என்க.

(351)