பக்கம் : 925
 
     (இ - ள்.) மஞ்சு தோயும் வரையார் தம் மன்னன்றன்னை - முகில்கள் படியாநின்ற
மலையிடத்தே வாழும் விஞ்சையருடைய வேந்தனாகிய அச்சுவகண்டன் உடலை,
அஞ்சுதோன்ற - தம் அச்சம் தோன்றுமாறு, மதயானை நுதலின் இழித்து - யானையினது
நெற்றியினின்றும் அகற்றி, அந்தணாளர் - பார்ப்பனர்கள், மெய்தீண்டி - அவ்வுடலைத் தம்
கையாலே பற்றி, பஞ்சும் - மெல்லிய பஞ்சினையும், துகிலும் - வெண்டுகிலையும்,
பூம்பட்டும் - அழகிய பட்டினையும், பாய - பரப்பியுள்ள, பள்ளிபடுத்து - படுக்கையை
விரித்து, அதன்மேல் - அப்படுக்கையின்மேல், வஞ்சமில்லாப் புகழானை - மெய்யாய
புகழுடைய அச்சுவகண்டனை, வயங்கு செந்தீவாய் - ஒளிர்கின்ற செவ்விய தீயிடத்தே,
பெய்தார் - இட்டனர், (எ - று.)

     அந்தணாளர் அச்சுவகண்டன் உடலைத் தீண்டிப் பஞ்சும் துகிலும் பட்டும் பரப்பிய
பள்ளியின் மேலே கிடத்திச் செந்தீப் பெய்தார் என்க.

     அஞ்சு - அச்சம். அந்தணாளர் ஆகலின் அத்தீயோன் பிணத்தையும் அஞ்சினர்
என்பார் ‘அஞ்சுதோன்ற இழித்தனர்’ என்றார்.

(353)

 
1484. மணிகண்டன் முதலிய ஏனையோர்
     உடலங்களையும் தீயிலிடல்
மன்னன் றம்பி 1மார்களையு
     மக்க 2டமையு மற்றொழிந்த
பொன்னம் புனைதார் வேந்தரையும்
     பொருது பட்ட 3போர்க்களமீ
4தென்னுஞ் சாடு மெரிவாய்ப்பெய்
     திரங்கி யழுதாங் கேகினரால்
உன்னி வந்த முடிக்ககிலா
     துடைந்த வேந்த னுழையாரே.
 
     (இ - ள்.) மன்னன் தம்பிமார்களையும் - அச்சுவகண்டன் தம்பிமாராகிய
மணிகண்டன் முதலியோர் உடலங்களையும், மக்கள்தமையும் - கனகசித்திரன் முதலிய
அவன் மக்கள் உடலங்களையும், மற்று - மேலும், ஒழிந்த - எஞ்சிய, பொன் அம்புனை
தார் வேந்தரையும் - அழகிய பொன் மாலையையும் பூமாலையையும் அணிகின்ற இறந்த
வேந்தர் உடலங்களையும், பொருதுபட்ட போர்க்களமீது - போர்செய்து மாண்டொழிந்த
அப்போர்க் களத்திற்றானே, என்னும் சாடும் - எதனையும் கொன்று தீர்க்கின்ற, எரிவாய்ப்
பெய்து - நெருப்பிடத்தே இட்டு, இரங்கி அழுது ஆங்கு ஏகினர் - அவர்க்குப் பெரிதும்
இரங்கி அழுதவாறே மீண்டு போகலானார், உன்னிவந்த முடிக்ககிலாது - தான்
எண்ணிவந்த செயல்களை முடிக்கமாட்டாது, உடைந்த - மாண்டொழிந்த, வேந்தன் -
அச்சுவகண்டனுடைய, உழையர் - பக்கத்துள்ள வேந்தர், (எ - று.)
 
 

     (பாடம்) 1மார்களும். 2டாமு. 3போர்க்களந். 4தென்னஞ்சாடியெ.