பக்கம் : 929 | | | திவிட்டன் பாசறை எய்துதல் | 1490. | கருமுகில் வண்ணனுங் 1கருடன் மேலிழிந் துருமென வதிர்தரு மோடை யானைமேற் பொருமிகல் வேந்தர்போற் றிசைப்பப் போந்தரோ பரிமிகு படைவிடு பாடி நண்ணினான். | (இ - ள்.) கருமுகில் வண்ணனும் - இவ்வாறு கட்டளையிட்டருளிய பின்னர்த் திவிட்டநம்பியும், கருடன்மேல் இழிந்து - கருடவூர்தியினின்றும் இறங்கி, உரும் என அதிர்தரும் - இடி போலப் பிளிறுகின்ற, ஓடையானை மேல் - முகபடா மணிந்த யானையின் மேலே, பொரும் இகல் வேந்தர் போற்று இசைப்ப - தன்னைப் போரிட்டழித்தற்கு வந்த பகைவராகிய விச்சாதர மன்னரே புகழ்ந்து வாழ்த்தெடுப்ப, போந்து - வந்து, பரிமிகு படைவிடு பாடி நண்ணினான் - புரவிகள் மிக்க படைகள் தங்கும் பாசறையை எய்தினான், (எ - று.) நம்பி முரசறைய ஏவிய பின்னர்க் கருடன் தோளினின்றும் இறங்கி யானையேறி மன்னர் போற்றெடுப்பப் படைவீட்டை எய்தினான் என்க. | (360) | | விசயனும் திவிட்டனும் பயாபதியை வணங்கல் | 1491. | விரிதரு திங்களின் விளங்கு மேனியன் பெரியவன் றன்னொடும் பெயர்ந்து தாதைதன் றிருவமர் சேவடி சென்று தாழ்ந்தனன் கருவரை யனையதோட் கனபொற் றாரினான். | (இ - ள்.) விரிதரு திங்களின் - நிலாவிரிக்கும் திங்கள் மண்டிலத்தைப் போன்று, விளங்கும் மேனியன் - திகழ்கின்ற திருமேனியை உடையவனாகிய, பெரியவன் றன்னொடும் - தன் அண்ணனாகிய விசயனுடனே, பெயர்ந்து - சென்று, தாதை தன் - பயாபதி மன்னனுடைய, திருவமர் சேவடி - திருமகள் விரும்புதலையுடைய செவ்விய அடிகளிலே, சென்று தாழ்ந்தனன் - அடைந்து வணங்கினான், கருவரை அனைய தோள் கன பொன் தாரினான் - கரிய மலைபோலும் திண்ணிய தோள்களையுடைய கனவிய பொன்னாலியன்ற மாலையணிந்த திவிட்ட நம்பி, (எ - று.) திரு - அழகுமாம். பின்னர் நம்பி விசயனுடனே சென்று தாதையாகிய பயாபதியின் சேவடியை வணங்கினான் என்க. | (361) | |
| (பாடம்) 1கருடனின்றிழிந் | | |
|
|