பக்கம் : 930
 
 
பயாபதி வேந்தனின் மகிழ்ச்சி
1492. மக்கள தாற்றலான் மலர்ந்த கண்ணினன்
மிக்குமேல் விரிந்தொளி துளும்பு மேனியன்
தொக்கநீர்ச் சுரமைநா டுடைய கோனிவை
பக்கநின் றரசர்கள் பணியச் சொல்லினான்.
 
     (இ - ள்.) மக்களது ஆற்றலான் - தன்மக்களுடைய பேராற்றலை உணர்ந்தமையாலே,
மலர்ந்த கண்ணினன் - மகிழ்ச்சிமிக்கு மலர்ந்து விளங்கும் கண்களை உடையனாய், மிக்கு
மேல் விரிந்து ஒளிதுளும்பும் மேனியன் - அகமகிழ்ச்சி மிகுந்து மெய்படப் பரவி ஒளிதவழா
நின்ற திருமேனியை உடையனாய், தொக்க நீர்ச் சுரமை நாடுடைய கோன் - மிக்க
நீர்வளமுடைய சுரமை நாட்டை ஆள்கின்ற அரசனாகிய பயாபதிவேந்தன், பக்கம்நின்று
அரசர்கள் பணிய இவை சொல்லினான் - தன் பக்கத்தே நின்று வேந்தர் பலர்
வணங்காநிற்ப இம் மொழிகளைக் கூறினான், (எ - று.)

     தன் மக்களின் வெற்றியை உணர்ந்த பயாபதி அளவில்லாத மகிழ்ச்சியுடையனாய்,
கண்மலர்ந்து உடல் பூரித்துப் பின் வருமாறு கூறினன் என்க.

(362)

 
 
பயாபதி மக்களின் முடிசூட்டுவிழவினைக்
காண விழைதல்
1493. தீதறு மணிமுடிச் செல்வக் காளையர்
தாதையென் 1றியலுரை தவத்தி னெய்தினேன்
ஆதலா 2லிவர்தம தரச கோலமெங்
காதலங் கண்ணிவை காண 3லாகுமே.
 
     (இ - ள்.) தீதறு மணிமுடிச் செல்வக் காளையர் - குற்றமற்ற மணிகளானியன்ற
கோமுடியினை உடைய செல்வமிக்க இவ் விசய திவிட்டர்களின், தாதை என்று -
தந்தையாவான் பயாபதி என்னும், இயலுரை - நிகழாநின்ற புகழ்மொழியை, தவத்தின் -
மேலைத்தவப்பயனானே, எய்தினேன் - பெற்றுள்ளேன். ஆதலால் - ஆகையாலே, இவர்
தமது -இவருடைய, அரசகோலம் - திருமுடி சூட்டும் எழிலும், காதலங்கண் இவை - காண
வேணவாவுடைய இந்தக் கண்கள், காணல் ஆகுமே - கண்டு மகிழ்தலும் இயல்வதேயாம்,
(எ - று.)

     இவர்க்குத் தாதையாக்கிய தவம், இதனையும் காட்டுமாகலின், காணலாகும் என்றான்
என்க.

(363)


     (பாடம்) 1 றிவ்வுரை. 2 லிவ னென வரசர். 3 லுற்றவே.