பக்கம் : 932 | | கங்கை முதலிய கடவுள் யாற்று நீரைப் பொற்குடங்களிலே கொணர்ந்து அரசர்கள் முறைப்படி விசயதிவிட்டர்களுக்கு மண்ணுமங்கல விழாச் செய்தனர் என்க. | (365) | | திவிட்டற்கு நீராட்டற் சிறப்பு | 1496. | திருமணி நிழலொளித் தெய்வ வான்படை பருமணிப் பாற்கடற் பரவை நீர்முகந் தெரிமணிக் குடங்களி னேந்தி யேந்தறன் சுரிமணிக் குஞ்சிமேற் சொரிந்த தென்பவே. | (இ - ள்.) திருமணி நிழல் ஒளி - சிறந்த மணிஒளிபோன்ற ஒளியையுடைய, வான் தெய்வப்படை - வானத்தே உறைகின்ற தேவர்குழாம், பருமணி பாற்கடல் - பரிய மணிகளையுடைய திருப்பாற்கடலின்கண்ணே, பரவை நீர் முகந்து - பரவியுள்ள பாலாகிய நீரை முகந்து, எரிமணிக் குடங்களின் ஏந்தி - ஒளிருகின்ற மணிகள் இழைத்த பொற்குடங்களிலே தாங்கிக் கொணர்ந்து, ஏந்தல் தன் - திவிட்டனுடைய, சுரி மணிக்குஞ்சிமேல் -சுருண்ட நீல மணிபோன்ற தலைமயிர் முடியின்மேலே, சொரிந்தது என்பவே - பொழிந்தது என்று புலவர் கூறுவர், (எ - று.) புராணப் புலவர்கள் தெய்வக்குழாம் திருப்பாற்கடலின்கட் பாலை மணிக்குடத்தே கொணர்ந்து திவிட்டற்கு நீராட்டினர் என்றும் கூறுப என்று தேவர் கூறுகின்றனர் என்க. | (366) | | இதுவுமது | 1497. | வெந்திறல் விறலொளி விஞ்சை வேந்தரு மந்தர மணிமலை மலரு மம்மலை யந்தர வருவியும் விரவி யாட்டினா ரிந்திர னனையவற் கிறைஞ்சி யென்பவே. | (இ - ள்.) வெந்திறல் விறல் ஒளி - வெவ்விய ஆற்றலையும் வெற்றியையும் புகழையும் உடைய, விஞ்சை வேந்தரும் - விச்சாதர மன்னர்களும், மந்தர மணிமலை மலரும் - மந்தரம் என்னும் மாணிக்கமலையின்கண் உள்ள தெய்வமலர்களையும், அம்மலை அந்தர அருவியும் - அந்த மலையிடையே வீழுகின்ற அருவி நீரையும், விரவி - கலந்து, இந்திரன் அனையவற்கு - தேவேந்திரனை ஒத்த திவிட்டனுக்கு, இறைஞ்சி - தெய்வம் பராய், ஆட்டினர் என்பவே - மங்கல நீராட்டினர் என்று புலவர் கூறுவர், ஏ: அசை, (எ - று.) விச்சாதரர் மலைநாட்டிலுள்ள அருவி நீரையும் மலர்களையும் கொணர்ந்து நம்பிக்கு நீராட்டினர் என்ப என்க. | (367) |
| | |
| |