பக்கம் : 933
 

திவிட்டனுக்குக் காப்புநாண் அணிதல்

1498. திருமகள் பரிவொடு சென்று 1சார்தரு
முருவினு மொளியினு முலகந் தன்னின்மேன்
மருவிய நூலது மரபி னானுமக்
கருமுகில் வண்ணனைக் காவ னாட்டினார்.
 
     (இ - ள்.) திருமகள் பரிவொடு - திருமகள் விருப்பத்தோடே, சென்று சார்தரும் -
தானே வந்து அடையும், உருவினும் - திருமேனி உண்மையானும், ஒளியினும் -
பெரும்புகழுண்மையானும், உலகந்தன்னின் - இவ்வுலகத்தே, மேல் மருவிய நூலது
மரபினானும் - பண்டு பொருந்திய மெய்ந்நூல்கள் கூறும் வரலாற்றானும், அக் கருமுகில்
வண்ணனை - அந்தத் திருமாலே ஆகின்ற திவிட்டனை, காவல் நாட்டினார் - காப்புச்
செய்தனர், (எ - று.)

     உருவினானும் ஒளியினானும் நூற்சான்றானும் வாசுதேவனே என்று அறியப்பட்ட
திவிட்ட நம்பியைக் காப்பு நாண் அணிந்தனர் என்க.

(368)

 

திவிட்டனை வாசுதேவன் எனப் பாராட்டி முடியணிதல்

1499. விட்டெரி மணிவரை நேமி வேந்தனை
அட்டிவ னெய்தினா னாழி யாதலான்
மட்டிவ ரலங்கலான் வாசு தேவனென்
றொட்டிய வொளிமுடி யொன்று சூட்டினார்.
 
     (இ - ள்.) விட்டு - சுடர்வீசி, எரி - ஒளிர்கின்ற, மணிவரை - இரத்தின பல்லவம்
என்னும் மலையை உடைய, நேமி வேந்தனை - சக்கரத்தையுடைய பிரதி வாசுதேவனாகிய
அச்சுவகண்டனை, அட்டு - கொன்று, இவன் - இத்திவிட்டன், ஆழி எய்தினான் ஆதலான்
- தனக்குரிய சக்கரப் படையை அவன்பாலிருந்து பெற்றானாதலாலே, மட்டு இவர்
அலங்கலான் - தேன் துளும்புகின்ற மலர்மாலையையுடைய இவன், வாசுதேவனே -
வாசுதேவனே ஆவான், என்று - என்று கூறி, ஒட்டிய ஒளி முடி - பொருந்திய ஒளியை
உடைய முடிக்கலன், ஒன்று - ஒன்றனை, சூட்டினார் - திவிட்டநம்பியின் - தலையிலே
சூட்டினார்கள், (எ - று.)
 

(பாடம்) 1 சார்ந்தன.