பக்கம் : 934
 

     பிரதி வாசுதேவனாகிய அச்சுவகண்டனைக் கொன்று அவன் ஆழியையும்
கைப்பற்றினமையால் நம்பி வாசுதேவனே என்று புகழ்ந்து முடிக்கலன் அணிந்தனர் என்க.

(369)
 
விசயனைப் பலதேவனே இவன் எனப்
பாராட்டி முடியணிதல்
1500. பெருகிய மிகுதிறற் பெரிய நம்பியை
மருவிய 1வளைவண னென்ன நீண்முடி
கருவிய மரபினாற் கவித்துக் காவலன்
திருவமர் சேவடி சிலம்ப வாழ்த்தினார்.
 
     (இ - ள்.) பெருகிய மிகுதிறல் - நாடோறும் பெருகி வளர்ந்த மிக்க ஆற்றலுடைய,
பெரிய நம்பியை - மூத்த நம்பியாகிய விசயனை, மருவிய - அவ்வாசுதேவனை அகலாது
கூடிய, வளைவணன் என்ன - பலதேவனே இவன் என்று புகழ்ந்து, நீண்முடி - நெடிய
முடிக்கலன் ஒன்றனை, கருவிய மரபினால் - தொகுதிகளையுடைய முறைமையாலே, கவித்து
- தலைமிசைச் சூட்டி, காவலன் - அப்பலதேவனுடைய, திருவமர் - திருமகள்
விரும்புதலையுடைய, சேவடி - செய்ய அடிகளை, சிலம்ப - ஆரவாரம் மிகும்படி,
வாழ்த்தினார் - புகழ்ந்து வாழ்த்துவாராயினர், (எ - று.)

     மூத்த நம்பியையும் வாசுதேவனை அகலாத பலதேவனே இவன் என்று புகழ்ந்து
முடிக்கலன் அணிந்து ஆரவாரமுண்டாகும்படி வாழ்த்தினார் என்க.

(370)

 

சக்கர முதலிய பிற அருங்கலங்களும் வந்தெய்துதல்

1501. இருங்கலி விழவினோ டரசி யற்றலும்
பெருங்கலி விழவின தெய்வம் பேணுவ
சுருங்கலில் சுடரொளி துளும்பத் தோன்றல்பா
லருங்கல மொழிந்தவு மடைந்த வென்பவே.
 
     (இ - ள்.) இருங்கலி விழவினோடு - பேராரவாரமுடைய திருவிழாக்களோடே,
அரசியற்றலும் - திவிட்டநம்பி அரசாட்சி செலுத்தும்பொழுது, அருங்கலம் ஒழிந்தவும் -
பெறற்கரிய நன்கலங்களாகிய முன்னரே தன்பால் எய்திய ஆழி வில் சங்கொழிந்த
ஏனையவும், பெருங்கலி விழவின - மிக்க முழக்கமுடைய விழாக்கோடற்குரியனவும்,
தெய்வம்
 

     (பாடம்) 1 புகழ்பல தேவனீ.