(இ - ள்.) சென்று உயர் - ஓங்கியுயர்ந்த, வலம்புரி - சங்கநிதி, செம்பொன் தாமரை - செவ்விய பொன்னிறமுடைய பதுமநிதி, என்று இயல் பெயரின - என்று வழங்குகின்ற பெயரினை உடைய, இரண்டும் - இரண்டாகிய இவ்வருங்கலங்கள், மாநிதி ஒன்று அல - பெருஞ் செல்வம் ஒன்றுமட்டுமே அல்ல, மணிகளும் ஒளிபொன் மாழையும் - மணிவகைகளும், ஒளியுடைய பொற்கட்டிகளும், இவை - இன்னோரன்னவைகளும், சொரிந்து - வேண்டுவன வழங்கி, ஒளி நிழற்றுகின்றவே - சுடர்வீசித் திகழ்வனவாயின, (எ - று.) மாநிதி, ஒன்றலமணிகளும் - மாநிதியும் பலவாகிய மணிகளும் என்பதூஉமாம். பொன் மாழை - பொற்கட்டி. மணிகள் - சிந்தாமணி சூளாமணி முதலிய மணிகளுமாம். நம்பிக்குச் சங்கநிதி பதுமநிதிகளும் ஏவல் செய்வனவாய் வேண்டிய போது வேண்டிய நிதியைச் சொரிந்தன என்க. |
(இ - ள்.) மிக்கு எரிசுடர் முடிசூடி - மிக்கொளிர்கின்ற சுடரையுடைய முடிக்கலன் அணிந்தவனாய், வேந்தர்கள் தொக்கவர் அடிதொழ - அரசர்கள் தன்னைச்சூழ்ந்து குழாங்கொண்டு தன் அடிகளை வணங்குமாறு, தோன்றும் - விளங்குகின்ற, தோன்றலால் - திவிட்ட நம்பியாலே, அக்கிரப் பெருஞ்சிறப்பு எய்தி - அக்கிரபூசனை செய்யப் பெற்று, ஆயிடை - அப்பொழுது, சக்கரப் பெருஞ் செல்வம் சாலை சார்ந்தவே - சக்கரவர்த்திகட்குரியவாய பெரிய அம்மாநிதிகள் பயாபதியின் கருவூலத்தைச் சார்ந்தன, (எ - று.) அக்கிரப் பெருஞ்சிறப்பு - முதன்மையான வழிபாடு. சக்கரப் பெருஞ்செல்வம் என்றது சங்கநிதி பதுமநிதிகளை. சங்கநிதி பதுமநிதிகள் நம்பியால் நன்கு வழிபாடு செய்யப்பெற்று அரண்மனைக் கருவூலத்தை எய்தின என்க. |