பக்கம் : 946
 
இது முதல் 5 செய்யுள் திவிட்டன் நகர்க்கேகும்
சிறப்புக் கூறும் ஒரு தொடர்
1522. தாமரை தங்குந் தண்புன வேலித் தடநீந்தித்
தாமரை தங்குந் தண்புன னன்னாட் டகமெய்தித்
தாமரை தங்குந் தண்சுட ரொண்பொற் கலைநல்லார்
தாமரை தங்குந் தண்புகழ் பாடத் தகைபெற்றான்.
 

     (இ - ள்.) தாம் மரை தங்கும் - தாவுகின்ற மான்கள் வதிகின்ற, தண் புனம் -
குளிர்ந்த தினைப்புனங்கள், வேலி - வேலிபோலச் சூழப்பெற்றுள்ள, தடம் நீந்தி -
அக்குறிஞ்சியிடத்தைக் கடந்து, தாமரை தங்கும் - தாமரை மலர்கள் பொருந்திய, தண்புனல்
- குளிர்ந்த நீர்நிலை மிக்க, நல் நாட்டு அகம் எய்தி - நல்ல நாட்டினூடே அடைந்து,
அரை தாம் தங்கும் தண்சுடர் ஒண்பொன் கலை நல்லார் - இடையிடத்தே பொருந்திய
குளிர்ந்த ஒளியையுடைய அழகிய பொன்னாலியன்ற மேகலையணிந்த மகளிர்கள், தாமரை
தங்கும்தண் புகழ்பாட - தாமரை யளவிற்றாகத் தங்கிய குளிர்ந்த புகழ்களைப் பாடிப் புகழா
நிற்ப, தகை பெற்றான் - பெருந்தகைமையைத் திவிட்டன் எய்தினான்,

      தாம்: அசை, (எ - று.)

     மூன்றாமடியில் தாமரை என்பதன்கண் தாம் அசைச்சொல். நாலாமடியில் தாமரை -
ஓர் எண். கலை மேகலையணி.

     நம்பி யானையேறிக் குறிஞ்சியைக் கடந்து புனனாட்டகத் தெய்தி, தாமரை என்னும்
அளவிற்றாய தன் புகழ்களை மேகலையணிந்த மகளிர்கள் பாடத் திகழாநின்றான் என்க.

(392)

 
1523. மாலைத் தண்கேழ் மாமதி போலும் வளர்சோதி
மாலைத் தண்கேழ் மாமணி முத்தக் குடைநீழன்
மாலைத் தண்கேழ் வண்புன னாடார் மகிழ்வெய்து
மாலைத் தண்கேழ் மால்கடல் வட்டம் வளாயிற்றே.
 
     (இ - ள்.) மாலை தண் கேழ் மாமதி போலும் - அந்திப் பொழுதிலே தோன்றும்
குளிர்ந்த ஒளியையுடைய முழுத் திங்களைப் போன்றதும், தண் கேழ் மாமணி முத்த மாலை
- குளிர்ந்த நிறங்கெழுமிய சிறப்புடைய மணியாகிய நித்தில மாலையாலே அணி செய்யப்
பெற்றதுமாகிய, குடைநீழல் - குடையினது நிழலின்கண், மகிழ்வெய்தும் - மனமகிழ்ந்து
வாழாநின்ற, மாலை - மரபினையுடைய, தண்கேழ் வண்புனல் நாடார் - குளிர்ந்த
நிறமமைந்த வளந்தருகின்ற நீர் நாட்டில் வாழும் மக்களாகிய, மால் ஐ தண் கேழ் மால்
கடல் வட்டம் - கரிய அழகையுடைய குளிர்ந்த நிறமமைந்த பெரிய கடல் போலும் கூட்டம்
வட்டமாக வளாயிற்று - திவிட்டனைச் சூழ்ந்தது, (எ - று.)