பக்கம் : 950
 

     (இ - ள்.) சூழ் இணர் மென் மல்லிகையும் - ஆராய்ந்தெடுத்த மெல்லிய மல்லிகை
மலரின் கொத்தாலியன்ற மாலைகளையும், வளையமும் - வளையல்களையும், மின்சூட்டும் -
மின்னும் நெற்றிப் பட்டங்களையும், எழில் துதைய - அழகு பெருக, சூட்டி - அணிந்து
கொண்டவராய், யாழ் அகவி - யாழ்இசை போலே பாடி, மணிவண்டும் - நீலமணி போன்ற
வண்டுகளும், அணிஞிமிறும் - அழகிய ஞிமிறுகளும், மதுகரமும் - மதுகரங்களும், இசைப்ப
- இசையெழுப்பி, செய்ய காழ் அகிலும் - செவ்விய நிறமுடைய அகிலிடு நறும்புகையும்,
நறுஞ்சாந்தும் - நறுமணங்கமழும் சந்தனமும், கடிவாசப்பூம் பொடியும் - மிக்கமணமுடைய
பொடிகளும், கமழ்ந்து - நறுமணம் கமழ்ந்து, கைபோய் - மிக்குச்சென்று, ஏழுலகும்
மணங்கொடுப்ப - மேலேழுலகத்தும் நாறா நிற்ப, எழில்நகரார் - அழகிய நகர்வாழ் மாந்தர்,
எதிர்கொள்ள - எதிர்கொண்டு வரவேற்ப, இறைவன் புக்கான் - மன்னனாகிய திவிட்டன்
நகரத்தே புகுவானாயினன், (எ - று.)

     வண்டும் ஞிமிறும் மதுகரமும் - தேன் வண்டுகளின் வகைகள். காழ் - வயிரமுமாம்.
மல்லிகையும் வளையலும் சூட்டும் சூட்டி அகவி இசைப்ப மணங்கொடுப்ப நகரார்
எதிர்கொள்ள நம்பி புக்கான் என்க.

(398)
 
 

திருவுலாச் சிறப்பு - இதிலிருந்து 25 செய்யுள்
ஒரு தொடர்.

1529. கோபுரமுங் கழிந்துகுளிர் நகரைவலங்
     கொடுவீதி குடையோன் செல்ல
நூபுரமு மேகலையுங் கலந்தொலிப்ப
     நுண்மருங்கு னுடங்க வோடி
மாபுரத்து 1மாளிகைதம் மணிக்கதவந்
     தாழ்திறந்து மனத்தின் றாழும்
வேய்புரையு மென்பணைத்தோண் மெல்லியலார்
     2மெல்லமெல்லத் திறந்தா ரன்றே.
 
     (இ - ள்.) கோபுரமும் கழிந்து - தலைவாயிற் கோபுரவாயிலையும் கடந்து உட்சென்று,
குளிர்நகரை - மகிழாநின்ற போதன நகரத்தை, வலங்கொடு - வலங்கொண்டு, வீதி -
வீதியிடத்தே, குடையோன் செல்ல - திங்கள் வெண்குடைத்திவிட்டன் செல்லா நிற்ப,
நூபுரமும் - காலணிகலனும், மேகலையும் - மணிமேகலை அணியும், கலந்து ஒலிப்ப - கூடி
முழங்கவும், நுண்மருங்குல் நுடங்க - நுண்ணிய இடை துவளவும், வேய்புரையும்
மென்பணைத்தோள் - மூங்கிலை ஒத்த மென்மையுடைய பருத்த
 

     (பாடம்) 1 மடவார். 2மெல்லவே.