பக்கம் : 952
 
 
1531. செந்தாஅ மரைபுரையுஞ் செழுங்கண்ணுந்
     தடக்கையும் பவளவாயும்
அந்தாஅ மரைநாறு மடியிணையு
     மவையவையே காண்மின் காண்மின்
நந்தாஅ மரைநாட னகையிலங்கு
     மணியார நவின்ற மார்பம்
பைந்தாஅ மரைமடந்தை பாராட்டப்
     பொலிந்திலங்கும் படியுங் காண்மின்.
 
     (இ - ள்.) செந்தாஅ மரை புரையும் - சிவந்த தாமரை மலரையே ஒப்பனவாம்,
செழுங்கண்ணும் - கண்ணோட்டமிக்க கண்களும், தடக்கையும் - பெரியகைகளும்,
பவளவாயும் - பவள நிறமுடைய திருவாயும், அந்தாமரை - அழகிய அத்தாமரை
மலரையே ஒப்பன, நாறும் அடியிணையும் - நறுமணங்கமழாநின்ற திருவடியிணையும்,
அவையே அவை காண்மின் காண்மின் - அத்தாமரை மலர்களே அவையிற்றின் அழகைப்
பாருங்கோள், நம் - நம்முடைய, தாமரை நாடன் - தாமரை மிக்க சுரமை நாட்டு
வேந்தனாகிய திவிட்டனுடைய, நகையிலங்கு - ஒளி திகழ்கின்ற, மணியாரம் நவின்ற -
மணிவடம் புனையப் பெற்ற, மார்பம் - மார்பானது, பைந்தாமரை மடந்தை - பசிய தாமரை
மலரிலே வீற்றிருப்பவளாகிய திருமகள், பாராட்ட - புகழ்ந்து போற்ற, பொலிந்து
இலங்கும்படியும் - அழகுற்று விளங்குகின்ற தன்மையையும், காண்மின் - காணுங்கோள்,
(எ - று.)

     கண்ணுக்குச் செழுமையாவது, கண்ணோட்டம் என்க.

     தாமரை மலரை ஒத்த கண்களையும், கையையும், வாயையும், அடியிணையையும்
உடைய நம்பியின் அவயவங்களின் அழகிருந்தபடியைக் காணுங்கோள், நம்பியின்
ஆரமார்பம் தாமரை மடந்தை பாராட்டுமாறு பொலிந்திலங்குதலையும் காணுங்கோள்
என்றார், என்க.

(401)

 
1532 .உரற்கால முறச்செவிய வோங்கெருத்தி
னோடைமால்யானைமே லொளிசூழ் மாலை
நிரற்கால மணிநிரைத்த நெடுங்குடைக்கீழ்
முடிநிழற்ற நெடுமால் பின்னே
சரற்கால சந்திரனோர் தடவரைமேல்
வெண்முகிற்கீழ்த் தயங்கி யாங்கே
அரக்காம்பல் வாயினிரிவ் வருநனலர்
தாரான்மற் றவன்சீர் காண்மின்.