(இ - ள்.) உரல்கால - உரலைப் போன்ற கால்களையுடைய, முறம் செவிய - முறத்தைப் போன்ற செவிகளையுடைய, ஓங்கு எருத்தின் - உயர்ந்த பிடரினையும், ஓடை - முக படாத்தையும் உடைய, மால் - பெரிய, யானைமேல் - யானையின் மேலே, ஒளிசூழ் மாலை - ஒளி பரப்பும் மாலையணிந்த, நிரல் கால - வரிசையாக அமைந்த கால்களையுடைய, மணி நிரைத்த - மணிமாலைகளால் ஒழுங்குபடுத்திய, நெடுங்குடையின்கீழ் - நீண்ட குடையின் நீழலிலே அமர்ந்து, முடிநிழற்ற - முடிக்கலன் ஒளி வீச, நெடுமால் பின்னே - திருமாலாகிய திவிட்ட நம்பியின் பின்னர், சரற் கால சந்திரன் - கார்ப்பருவத்து முழுவெண்டிங்கள், தடவரைமேல் - பெரிய மலையின் உச்சியிலே, வெண் முகிற் கீழ்த் தயங்கி ஆங்கு ஏ - வெண்மை நிறமுடைய மேகத்தின் கீழே ஒளிர்ந்தாற் போன்று, வருநன் - வருகின்றவனாகிய, அலர் தாரான் - மலர்மாலையணிந்த, மற்றவன் - விசயனுடைய, சீர் - சிறப்பையும், அரக்காம்பல் வாயினிர் - செவ்வல்லி மலரை ஒத்த வாயையுடைய தோழியீர், காண்மின் - பாருங்கோள், (எ - று.) ஆம்பல் வாயினிர்! மால்யானை எருத்தின்மேல், மணி நிரைத்த நெடுங்குடைக்கீழ், கார்கலத்துத் திங்கள் ஒரு கரிய மலையின்மேல் வெளிய முகிலின்கீழிருந்து, திகழ்ந்தாற் போன்றுவருகின்ற மூத்த நம்பியின் அழகினையும் காணுங்கோள்; என்றார். என்க. |
(இ - ள்.) சேதாம்பல் வீழ்ந்தனைய - அரக்காம்பல் மலர் சாய்ந்தாற் போன்ற, செவ்வாயும் - சிவந்த வாயினது அழகையும், செங்குவளை திளைத்த கண்ணும் - செங்கழுநீர் மலரை ஒத்த திருக்கண்களின் அழகையும், மீதார்ந்த வெண்ணிலாச் சுடர் ஒளியும் - திருமேனியின் மேலே பொருந்திய வெள்ளிய நிலா வொளியை ஒத்த ஒளியின் அழகையும், வெள்ளிக் குன்றனைய தோளும் - வெள்ளிமலையை ஒத்த தோளின் அழகையும், போது ஆர்ந்த - மலர் பொதுளிய, கருங்குஞ்சி - கரிய தலைமயிர், மணி |