(இ - ள்.) எழுதாது மைஒளிரும் - மை எழுதப்படாமலே இயல்பாக நீலநிறம் வீசுகின்ற, இருமருங்கும் எறித்து - இரண்டு பக்கங்களினும் ஒளி பரப்பி, இடையே - நடுவே, செங்கேழ் ஆடி - சிவந்த நிறமுடைய வரிகளைப் பெற்று, தொழுதாற்கு - ஊடல் தீர்ப்பான் தொழாநின்ற தன் காதலனுக்கு, வரங்கொடுக்கும் - பேரின்பத்தை நுகர்தற்குரிய வரத்தை அப்போதே அளிக்கின்ற, தடங்கண்ணி - அகன்ற கண்களையுடைய சுயம்பிரபையின், துணைமுலையின் வளாகம் சூழ - இரண்டாகிய முலைகளின் வட்டத்தைச் சூழ, இழுதாய - குழம்பாகிய, குங்குமத்தால் - குங்குமத்தாலே, இலதையையும் - கொடிகளையும், கொழுந்தினையும் - பூங்கொழுந்துகளையும் போன்று, இழைத்தார் - தொய்யில் எழுதினர், பின்னும் - அதன்மேலும், முழுதார முத்து அணிந்தார் - முழுதாகிய நித்திலக்கோவையையும் சூட்டினார், நுண் மருங்குல் உளதாக - இங்ஙனம் ஒப்பனை செய்தவர்கள், இவளுடைய நுண்ணிய இடைமுறியாதே உளதாக வேண்டும் என்னும் எண்ணமுடையராய், முயன்றார் அல்லர் - ஒப்பனை செய்தவராகார், (எ - று.) தொழுதாற்கு வரங் கொடுக்கும் - என்னும் இவ்வரி சிந்தாமணியினும் வந்தளது. ஆங்கு, “தொழுதாற்கு", - என்பதற்கு “தன்னால் தொழப்பட்ட கணவனுக்கு" என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறினர். குங்குமச் சேற்றாலும் கனவிய முத்தாரத்தாலும், ஒப்பனை செய்தோர், இவளிடை நுண்ணிதாதலை அறிந்து முயன்றவர் ஆகார் என்பதாம். ஊடல் தீர்ந்தமை கண்ணால் அறியப்படும், அறிந்தவுடனே கூடிப் பேரின்பம் நுகர்வன் தலைவன் ஆகலின், ஊடல் தீர்ந்த மெய்ப்பாட்டை விளக்குதலை “வரங் கொடுக்கும்Ó என்றனர். |