பக்கம் : 958
 

     ஒன் அரத்த நுண் கலிங்கம் ஒன்று சேர்த்தி - ஒள்ளிய குருதி வண்ணத்து நுணுகிய
தொழிற்றிறமமைந்த பட்டாடை ஒன்றனை இடையில் அசைத்து, மீதாடி வில் உமிழும் -
மேற்புறத்தே அசைந்தொளிரும், மிடைமணி ஒண் கலாபங்கள் - செறிந்த மணிகளானாய
ஒள்ளிய பதினாறு மணிக்கோவைகள், மிளிர வீக்கி - திகழும்படி கட்டி, இவர் - இங்ஙனம்
ஒப்பனை செய்த மகளிர், யாதானும் - தம் ஒப்பனைத் தொழில் ஒவ்வொன்றானும், இவள்
அல்குல் அகலாமை - இவளது அகலிதாய அல்குற்றடம் மேலும் அகன்றிடாதவாற்றை,
அறிந்து - ஆராய்ந்தறிந்தே, அடக்கம் செய்தார் - அடங்குதற்கேற்ற ஒப்பனையைச்
செய்தனர் போலும், (எ - று.)

     புரைவட்டம் - துகிலின் விளிம்பு; கரை.

     அடக்கம் - அடக்குதற்குரிய செய்ல, கலாபம் -பதினாறு கோவை மணி வடம்.
இதனைக் காஞ்சி என்றும் கூறுப.
    
     ஒப்பனை செய்தார், சேர்த்தி, வீக்கி அகலாமை அறிந்து - அடக்கம் செய்தார் என்க.

(408)

 
1539. கந்தாரங் கொளவீக்கிக் கடிவிரிந்து
     பூம்பாளை கமழுங் காலை
நந்தாஅ வனத்திளையா ரெழுவியாழ்
     நரம்பினுக்கு நலஞ்சா லின்சொன்
மந்தார மலர்கமழு மணியைம்பான்
     மைமதர்த்த மழைக்கண் மாதர்
செந்தாஅ மரையடியின் செவ்வியுமற்
     றிதுவாயிற் றெய்வ மேயாம்.
 
     (இ - ள்.) வீக்கி - தேன்நிரம்பப் பொதிந்து, கடிவிரிந்து - மணம் விரித்து, பூம்பாளை
- பூவாகிய பாளைகள், கமழும் - கமழா நின்ற, காலை - விடியலிலே, நந்தா அவனத்து -
பூம்பொழிலில், இளையார் - இளமகளிர்கள், யாழ் - தமது யாழ் என்னும் கருவியை வீக்கி -
நரம்புகளை முறுக்கி விசைத்து, கந்தாரம்கொள எழுவு - காந்தாரம் என்னும் பண்ணுண்டாக
வருடி எழுப்புகின்ற, நரம்பினுக்கும் - நரம்புதரும் இசையினும் காட்டில்,

     நலம் சால் இன்சொல் - நன்மைமிக்க இனிய செல்லையுடையவளும், மந்தார மலர்
கமழும் - கற்பக மலர் மணம் கமழா நின்ற, மணி ஐம்பால் - நீலமணி போன்ற நிறமுடைய
கூந்தலையும், மை மதர்த்த மழைக்கண் - மையுண்டு மதர்த்த மழைபோலும் குளிர்ந்த
கண்களையும் உடையவளுமாகிய, மாதர் - சுயம்பிரபையின், அடியின் செவ்வி -
திருவடிகளின் அழகும், செந்தாமரை - செந்தாமரை மலரின் அழகை ஒக்கும், மற்றிது
வாயின் - இவள் அழகு இவ்வாறாயின், தெய்வமே யாம் - சுயம்பிரபை விஞ்சை மகளும்
அல்லள் தெய்வ மகளே ஆகும், (எ - று.)