பக்கம் : 961
 
  கூடுவார் கொற்றங் கொள்ளக் கூறுவா ராகி யெங்கு
மூடுபோக் கரிய தாக வொளிநக ருழையர் சூழ்ந்தார்.
 
     (இ - ள்.) ஆடுவார் - களிப்பாலே கூத்தாடுவார், அணங்கு கொள்வார் -
அணங்காடுவார், ஆர்வம் செய் கருவி வீக்கி - தாம் விரும்பும் இசைக் கருவிகளைத்
திருத்திக்கொண்டு, பாடுவார் - இசை பாடுவார், கூறி்ப் பரவுவார் - புகழ்கூறி ஏத்துவார்,
பணிந்து முன்னால் கூடுவார் - திவிட்டனை வணங்கி அவன் முன்னர்க் கூடுவர், கொற்றங்
கொள்ளக் கூறுவார் - வேந்தே நீ வெல்க என வாழ்த்துவார், ஆகி - இவ்வாறாகி, எங்கும்
- எவ்விடத்தேயும், ஊடுபோக்கு அரிது ஆக - உள்ளே போதற்கு அரிதாக, ஒளிநகர்
உழையர் - புகழுடைய போதன நகரத்துப் பணியாளர்கள், சூழ்ந்தார் - குழீ இயினர்,
(எ - று.)

நகரத்துப் பணிமக்கள் ஆடுவார், அணங்கு கொள்வார், பாடுவார், பரவுவார், கூடுவார்,
கூறுவாராகி எங்கும் ஊடுபோதற் கியலாதபடி சூழ்ந்தனர் என்க.
அணங்கு கொள்ளுதலாவது - தெய்வமேறப்பெற்றாற் போன்று ஆடுதல்.

(413)

 
 
1544. ஞாயிறு மறைதல்
     அங்குலாங் கொடியி னாலு
மகிற்புகை யாலு மெங்கு
     1மங்குலாய் விசும்பு மூட
மழுங்கிய சுடர னாகி
     இங்குலா விளங்க மாட்டே
னினியென வெண்ணி வெய்யோன்
     கொங்குலாங் குளிர்கொள் சோலைக்
குடவரைக் குவடு சேர்ந்தான்.
 
     (இ - ள்.) அங்கு உலாம் கொடியினாலும் - அந்நகரத்தே அசைகின்ற
கொடிகளாலும், அகிற்புகையாலும் - அகிலாலாய மணற்புகையாலும், எங்கும் - யாண்டும்,
மங்குல் ஆய் - இருள் தோன்றி, விசும்பு மூட - வானத்தை மறைத்திட, வெய்யோன் -
கதிரவன், மழுங்கிய சுடரனாகி இவையிற்றால் ஒளி மழுங்கியவனாய், இங்கு -
இவ்வானத்தே, உலா - இயங்கி, விளங்கமாட்டேன் - ஒளிரவியலாதவன் ஆயினேன், என
எண்ணி - என்று கருதி, கொங்கு உலாம் - மணம் பரவுகின்ற, குளிர்கொள் சோலை -
குளிர்ந்த பொழிலையுடைய, குடவரை - மேலைமலையின், குவடு சேர்ந்தான் - உச்சியை
அடைந்தான், (எ - று.)

(பாடம்) 1 மங்குல்வாய்.