பக்கம் : 962
 

     கொடியாலும், புகையாலும், இருண்டு விசும்பு மறைபட, வெய்யோன் இனி இங்கு
இயங்க வியலாது என்று எண்ணி, சோலையினையுடைய குடவரைக் குவட்டை எய்தினான்
என்க.

(414)

 
1545. மணிவரை யரசன் மற்றை
     வாழ்நகர்க் கோயில் புக்கான்
பணிவரை யுழைய ராகிப்
     பயாபதி பக்க நின்றார்
தணிவரை யிலாத செய்கைத்
     தத்தமக் கியன்ற கோயி
லணிவரை யனைய திண்டோ
     ளருக்கனோ டரசர் சேர்ந்தார்.
 
     (இ - ள்.) மணிவரை அரசன் - அழகிய மலையரசனாகிய சடிவேந்தன், மற்றை
வாழ்நகர்க் கோயில் புக்கான் - தான் வதிகின்ற அரண்மனையை எய்தினான், பணிவரை
உழையர் ஆகி - தனது கட்டளை எல்லைக்கண் நின்று பணிசெய்யும் ஏவலர்களாய்,
பயாபதி பக்கம் நின்றார் அரசர் - பயாபதியின் மருங்கே நின்ற அரசர்கள்,
தணிவரையிலாத செய்கை - குறைவற்ற பெருஞ்செயல்களாலே இயற்றப்பட்ட, தத்தமக்கு
இயன்ற கோயில் - அவரவர்களுக்கென இயற்றப்பட்ட இல்லங்கட்கு, அணிவரை அனைய
திண்டோள் அருக்கனோடு சேர்ந்தார் - அழகிய மலை போன்ற திண்ணிய தோளையுடைய
அருக்ககீர்த்தியோடே எய்தினர், (எ - று.)

     அப்பொழுது, சடி தனக்கென இயற்றப்பட்ட அரண்மனையை எய்தினான்.
பயாபதியின் ஏவல் கேட்டுச் செய்யும் எல்லைக்கண் நின்றவராய ஏனையரசரும்
அருக்ககீர்த்தியோடே அவரவர் அரண்மனைக்கேகினர், என்க.

(415)

 

திவிட்டன் சுயம்பிரபையின் விமானத்தை அடைதல்

1546. மஞ்சுடை மாடக் கோயில் வளைவணன் புக்க பின்னைச்
செஞ்சுடர் மகரப் பூணான் றிருவெதிர் கொள்ளச் சென்று
விஞ்சையம் பாவை மேய விடைமணி விமானஞ் சேர்ந்தான்
எஞ்சலில் செல்வந் தன்னா லிந்திர னிரட்டி யுள்ளான்.
 
     (இ - ள்.) மஞ்சு உடைமாடக் கோயில் - முகில் தவழ்தலுடைய நெடிய
மாடங்களையுடைய தனது அரண்மனையின்கண், வளைவணன் - விசயன், புக்க பின்னை -
சென்று புகுந்த பின்னர், செஞ்சுடர் மகரப்பூணான் - செவ்விய ஒளியையுடைய மகர
கண்டிகையை உடைய திவிட்ட நம்பி, திருஎதிர்கொள்ளச் சென்று - மங்கலப் பொருள்கள்
ஏந்தி மகளிர் எதிர் கொண்டழைக்கப் போய், விஞ்சை அம் பாவை மேய - விச்சாதர
மகளாகிய சுயம்பிரபை இருந்த, விடைமணி விமானம் சேர்ந்தான் - மிக்க மணிகளை
உடைய விமானத்தை எய்தினான், எஞ்சலில் செல்வந்தன்னால் - குறைவற்ற செல்வப்
பேற்றாலே, இந்திரன் இரட்டி உள்ளான் - தேவேந்திரனையும் காட்டில் இருமடங்கு
பெரியோன், (எ - று.)