பக்கம் : 964 | | (இ - ள்.) அங்கு ஒளி விளக்கினாலும் -அவ்விடத்தே ஏற்றப்பட்ட ஒளிமிக்க விளக்குகளாலும், அணிகலச் சுடரினாலும் - அங்குள்ளார் அணிந்துள்ள அணிகலன்களின் ஒளியினாலும், திங்களை அனைய - பிறையை ஒத்த, செல்வி திருநுதல் - சுயம்பிரபையின் அழகிய நெற்றியின், ஒளியினாலும் - ஒளி பரவுதலாதும், மங்கல மரபிற்று அல்லா - நன்மையில்லாத, மயங்கு இருள் - மயங்குதற்குக் காரணமான இருள், மறைந்து போக - மறைந்து ஒழிய, கங்குலும் - அவ்விரவும், மெல்ல மெல்ல - பைப்பய கையகன்றிட்டது அன்றே - கழிவதாயிற்று, அன்று, ஏ: அசைகள், (எ - று.) ஒளி விளக்காலும் அணிகலச் சுடராலும், செல்வியின் திருநுதல் ஒளியாலும், மங்கலமல்லாத இருள் அகன்றதாக, இரவும் மெல்லமெல்லக் கழிந்ததென்க. | (418) | | ஞாயிறெழுதலும் திவிட்டன் சுயம்பிரபை மாளிகையை எய்துதலும் | 1549. | காரிரு ளகன்ற போழ்திற் கமலினி யென்னுஞ் செல்விக் 1கோருரு ளாழி வெய்யோ னருளிய வுதயஞ் சேர்ந்தா னாரிரு னனைய கூந்தற் கருளிய மனத்த னாகிப் பேரரு ளாழி யானும் பெயர்ந்துபொன் மாடஞ் சேர்ந்தான். | (இ - ள்.) கார் இருள் அகன்ற போழ்தின் - கரிய இராப்பொழுது கழிந்தவுடனே, கமலினி என்னும் செல்விக்கு - கமலினி என்னும் பெயரையுடைய (தாமரை) தன் தேவிக்கு, அருளிய - அருள்செய்யும் பொருட்டு, ஓர் உருள் ஆழி வெய்யோன் - ஒற்றை உருளையுடைய தேர் ஊரும் ஞாயிறு, உதயம் சேர்ந்தான் - குணக் குன்றத்தை எய்தினான், ஆர் இருள் அனைய கூந்தற்கு - பொருந்திய இருள் போன்ற கூந்தலையுடைய சுயம்பிரபையாகிய தன் தேவிக்கு, அருளிய மனத்தனாகி - அருள் கூர்ந்த மனத்தையுடையனாதய், பேர் அருள் ஆழியானும் - பெரிய அருளைச் செய்து உலகை ஓம்பும் ஓர் உருளையையுடைய திவிட்டநம்பியும், பெயர்ந்து - அவ்விடத்தை விட்டகன்று, பொன் மாடம் சேர்ந்தான் - பொன்னா லியன்றதொரு மேனிலை மாடத்தை எய்தினான், (எ - று.) அவ்வாறு இருள்தேய, வருந்தி இரவும் கழிந்தவுடனே, ஞாயிறு, தன் தேவியாகிய தாமரைக்கு அருள் செய்யக் கருதிக் குணக்குன்றினை எய்தினான்; நம்பியும், தன் தேவியாகிய சுயம்பிரபைக்கு அருள்செயக் கருதி, ஒரு பொன் மாடத்தை எய்தினான், என்க. | (419) | |
| (பாடம்) 1கோரரு. | | |
|
|