பக்கம் : 966
 

     (இ - ள்.) தேவி தன் தாதைக்கேற்ற - தன் கோப்பெருந் தேவியாகிய
சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனின் தகுதிக்குப் பொருந்துவனவாகிய, பெருஞ்
சிறப்பு இயற்றி - பெரிய சிறப்புக்களைச் செய்துபசரித்து, செல்வன் - திவிட்ட மன்னன்,
வேய் விரி வெள்ளிக்குன்றின் - மூங்கில்கள் அடர்ந்த வெள்ளிமலைக் கண்ணவாகிய,
விஞ்சையர் உலகம் எல்லாம் - விச்சாதரர் நாட்டை எல்லாம், ஓவு இல புகழினானுக்கு -
ஒழியாத புகழையுடைய சடி வேந்தனுக்கு, உடன்கொடுத்து - ஒருங்கே ஆளும்படி வழங்கி,
உரிமையோடும் - தன் மனைவி முதலிய உரிமைச் சுற்றத்தாரோடும், பூவிரி உருவத்தாரான்
பின்சென்று - மலர்கள் விரிந்த அழகிய மாலையுடைய அச்சடிவேந்தனுக்குப் பின்னே
தொடர்ந்து சென்று, விடுத்துப் போந்தான் - விடை கொடுத்து வழிவிட்டுப் பின் தன்
போதனத்தின் கண் வந்தனன்,
(எ - று.)

     தேவியின் தாதையாகிய சடிமன்னனின் தகுதிக்கேற்ற பெருஞ் சிறப்புக்கள் பல செய்து,
விச்சாதர உலகினை ஆளும் உரிமையும் அவனுக்கருளித் தன் உரிமையோடே பின்சென்று
வழிவிடுத்து மீண்டும் நம்பி போதனத்தே வந்தான் என்க.

 (421)

 

நம்பியின் மகிழ்ச்சி

1552. தெவ்வரங் கின்மை யாலுந்
     திசையினில் வணக்கற் பால
வவ்விழி யின்மை யாலு
     மருமணி வண்ண னாங்கு
மௌவலங் குழலி யாலு
     மணிநில மடந்தை யாலுஞ்
செவ்வலர்த் திருவி னாலுஞ்
     செருக்கிய களிய னானான்.
 
     (இ - ள்.) தெவ்வர் அங்கின்மையாலும் - தன்னாட்டின் கண் உட்பகையுடையார்
ஒருவரும் இல்லாமையாலும், திசையினில் - எண் திக்குகளினும், வணக்கற்பால - தான்
மேற்சென்று அடிப்படுக்கற் பாலவாகிய பகை ஏதும்; அவ்வழி - அத்திசைகளிடத்தேயும்,
இன்மையாலும் - இல்லாமையானும், அருமணிவண்ணன் - திவிட்டநம்பி, ஆங்கு -
அப்போது, மௌவலங்குழலியாலும் - முல்லைமாலையணிந்த கூந்தலையுடைய
சுயம்பிரபையென்னும் பெறற்கரும் பெருந்தேவியை உடைமையாலும், மணிநில
மடந்தையாலும் - அழகிய நிலமடந்தையை உடைமையாலும், செவ்வலர் திருவினாலும் -
அறநெறியானே செவ்விதிற் பெருகிய செல்வ மிகுதியாலும், செருக்கிய களியன் ஆனான் -
செம்மாப்பெய்தி மகிழ்வானாயினன், (எ - று.)

     தன் ஆட்சிக்கண் அமைந்த நாட்டின்கண் கொல்குறும்பு முதலிய உட்பகை
யில்லாமையானும், வேறு நாட்டினும் எல்லா அரசரும் தனக்கு இறை செலுத்துவோராய்
உள்ளாரன்றிப் பகையுடையோரின்மையானும், பெறற்கரிய தேவியை உடைமையானும்
வளமிக்க நாட்டையும் செவ்விதிற் பெருகிய திருவினையும் உடைமையானும் நம்பி
செருக்கிய களியனானான் என்க.

(422)