பக்கம் : 973
 

சுயம்பிரபை தான் வளர்த்த பாரிசாதத்திற்கும்
காமவல்லிக்கும் மணம் செய்ய எண்ணுதல்

1561. அன்னண மியலு நாளு ளக்கிரத் தேவி தங்கோன்
பொன்னணி யுலகின் வந்த பூவிரி பாரி சாத
மன்னிய லரும்பு வைப்ப மற்றத னோடு சேர்த்திக்
கன்னிய காம வல்லிக் கடிவினை காண லுற்றான்.
 
     (இ - ள்.) அன்னணம் இயலும் நாளுள் - அவ்வாறு செல்லா நின்ற நாளுள் வைத்து
ஒருநாள், அக்கிரத்தேவி - முதன்மனைவியாகிய சுயம்பிரபை, தங்கோன் - தன்
தந்தையாகிய சடிமன்னன், பொன்னணி உலகின் வந்த - அழகிய நாட்டினின்றும்
கொணர்ந்து வந்த, பூவிரி பாரிசாதம் - அழகுவிரிகின்ற பாரிசாதம் என்னும் தேவதரு,
மன்னியல் அரும்பு வைப்ப - வாடாமல் நிலைபெறுதலையுடைய அரும்பெடா நிற்ப, மற்று
அதனோடு சேர்த்தி - அரும்பியதனை மணப்பருவம் அரும்பியதாய்க் கொண்டு
அப்பாரிசாத மரத்தோடே பொருந்தக் கூட்டி, கன்னிய காமவல்லி - அதுகாறும்
ஒன்றனோடும் புணராது கன்னிமையோடு நின்ற காமவல்லி என்னும் தெய்வக் கொடியினை,
கடிவினை - மணத்தொழில் செய்விழாவினை, காணல் உற்றாள் - காண்டற்குப் பெரிதும்
விரும்பினாள், (எ-று.)

     தங்கோன் - ஈண்டுச் சடிமன்னன்.

     பாரிசாதம் என்னும் கற்பகத்துடனே, காமவல்லியை மணம் புணர்க்க விரும்பினாள்
என்க. காமவல்லி - கற்பக மரத்தின்மேற் படர்வதொரு தெய்வக்கொடி. அக்கிரத் தேவி -
முதன்மனைவி. இவ்வுலக அரும்புகள்போல் வாடாதே நிலைபெறும் தேவமலர் ஆகலின்
“மன்னியலரும்பு“ என்றார்.

(431)

 

சுயம்பிரபை, பாரிசாத மணத்தினைத்
திவிட்டற்கு அறிவிக்கத் தோழியை விடுதல்

1562. சுரும்பிவர் சோலை வேலித்
     துணர்விரி பாரி சாதம்
அரும்பிய பருவச் செல்வ
     மடிகளுக் கறிவி யென்று
1பெரும்பிணா வொருத்தி தன்னைப்
     பெய்வளை 2விடுத லோடும்
விரும்பினள் சென்று வேந்தற்
     கிறைஞ்சிவிண் ணப்பஞ் செய்தாள்.
 
 

     (பாடம்) 1 பெரும் பெணாள். 2 விடுத்த.