பக்கம் : 974
 

     (இ - ள்.) வேலி - காவல் வேலியை உடைய, சுரும்பு இவர் சோலை - வண்டுகள்
மொய்க்கின்ற நம் பூம்பொழிற்கண், துணர்விரி பாரிசாதம் - கொத்துக்களை
விரித்தெழுகின்ற பாரிசாத மரக்கன்று, அரும்பிய செல்வப் பருவம் - அரும்புகின்ற
செல்வமாகிய இளம்பருவம் எய்திய செய்தியை, அடிகளுக்கு அறிவி என்று -
நந்தலைவராகிய திவிட்ட அடிகளுக்கு இயம்பு வாயாக என்று பணித்து, பெய்வளை -
சுயம்பிரபை, பெரும்பிணா ஒருத்திதன்னை - பெரிய தோழி ஒருத்தியை, விடுத்தலோடும் -
ஏவியவுடன், விரும்பினள் சென்று - அவளும் விருப்பத்தோடே போய், வேந்தற்கு -
திவிட்டனுக்கு, இறைஞ்சி - வணங்கி, விண்ணப்பம் செய்தாள் - அச்செய்தியை
அறிவித்தனள், (எ - று.)

     துணர் விரி பாரிசாதம் அரும்பெடுத்து மணப்பருவம் எய்திய செய்தியை, அடிகட்கு
அறிவி, என்று நங்கை கூற, ஒருசிலதி விருப்பத் தோடே சென்று அச் செய்தியை
நம்பிக்குக் கூறினாள் என்க. “பெண்ணும் பிணாவும் மக்கட்குரிய“ என்பதோத்தாகலின்
பெரும்பிணா ஒருத்தி என்றார். பிணாப்பிள்ளைகாள் என்று பிறரும் கூறினர்.

(432)

 

இதுவுமது

1563. அடிகண்முன் னடித்தி யாரா
     லங்கைநீர் குளிர வூட்டி
வடிவுகொ டளிர்கண் முற்றி
     மகனென 1வளர்க்கப் பட்ட
கடிகமழ் பாரி சாத
     மதனொடோர் காம வல்லிக்
கொடிமணம் புணர்க்க லுற்ற
     குறிப்பறி நீசென் றென்றார்.
 
     (இ - ள்.) அடிகள் - அடிகளே, முன் அடித்தியாரால் - முன்னர்த் தேவியாராலே,
அங்கை நீர் குளிர ஊட்டி - தம் அழகிய கைகளாலே நீரைக் குளிரும்படி பெய்து பெய்து,
வடிவுகொள் தளிர்கள் முற்றி - அழகிய தளிர்ஈன்று முற்றச்செய்து, மகன் என - இது என்
மகனாம் என்று, வளர்க்கப்பட்ட - வளர்த்ததாகிய, கடிகமழ் பாரிசாதம் தன்னொடு - மணம்
கமழ்கின்ற பாரிசாத மரத்தினோடே, ஓர் காமவல்லிக்கொடி - ஒரு காமவல்லிக்
கொடியினை, மணம் புணர்க்கலுற்ற - திருமணம் புணர்த்தக் கருதியுள்ள, குறிப்பு -
தம்முடைய கருத்தினை, அறி - அடிகட்குக் கூறுவாய், நீசென்று - நீ போய், என்றார்
-என்று தேவியார் எனக்குப் பணித்தார், (எ-று.)

     பெரும்பிணா, நம்பிக்குக் கூறுவாள் :- அடித்தியார், அங்கையால் நீர் குளிரவூட்டி
மகன் என வளர்க்கப்பெற்ற பாரிசாதம் என்னும் மரத்தோடே காமவல்லிக் கொடியை மணம்
புணர்க்கக் கருதியுள்ள தம் கருத்தை அடிகட்கு அறிவிப்பாய் என எனக்குப் பணித்தார்
என்றாள் என்க. அறி - அறிவி.
 

 (433)


     (பாடம்) 1 வாக்கப்.