பக்கம் : 975
 

திவிட்டன்பால் விதூடகன் ஒருவன் வருதல்

1564. என்றவண் மொழிந்த போழ்தி
     னிலங்கொளி முறுவ 1றோன்றி
நன்றது 2பெரிதி யாமு
     நங்கைதன் மகனைக் காண்டும்
என்றவ னருளக் கேட்டே
     யிளையவள் பெயர்ந்து போக
மின்றவழ் வேலி னாற்கு
     விதூடக னுழைய னானான்.
 
     (இ - ள்.) என்று அவள் மொழிந்த போழ்தின் - என்று அவ்வுழைக்கல மகள்
உரைத்தவுடனே, இலங்கு ஒளி முறுவல் தோன்றி - திகழ்கின்ற ஒளியையுடைய புன்முறுவல்
பூத்து, நன்று அது பெரிதும் - ஆயின் அச்செய்தி பெரிதும் நன்று நன்று, யாமும் -
யாமும், நங்கை தன் மகனைக் காண்டும் - சுயம்பிரபையின் மகனாகிய பாரிசாதத்தின்
மணவினையைக் காண்பாம், என்று அவன் அருள - என்று திவிட்டநம்பியும்
இயைந்தருளிச் செய்ய, கேட்டே - அம்மொழியைக் கேட்டு, இளையவள் -
அவ்வுழைக்கலமகள், பெயர்ந்து போக - மீண்டுசென்றாளாக, மின்றவழ் வேலினாற்கு -
ஒளியுடைய வேலேந்தும் திவிட்ட நம்பியை, விதூடகன் உழையன் ஆனான் - தன்
விதூடகன் ஒருவன் அணுகினான், (எ - று.)

     விதூடகன் - அரசவையில் அரசனுடன் இருந்து வேடிக்கையாகப் பேசியும் ஆடியும்
அரசன் முதலியோரை நகைக்கும்படி செய்பவன். இத்தகைய விதூடகர்கள் பண்டு
அரசவையில் இருப்பது வழக்கம்.

     உழைக்கல மகள் அவ்வாறு கூறக்கேட்டவுடன், நம்பி முறுவல் பூத்து, அது பெரிதும்
நன்று, யாமும் நங்கை மகனைக் காண்பாம் என்றருள, இளையவள் போயபின், நம்பிக்கு
ஒரு விதூடகன் உழையன் ஆனான் என்க.
 

(434)

 

அவ் விதூடகன் இயல்பு

1565. .காதுபெய் குழையுஞ் செம்பொற்
     சுருளையுங் கலந்து மின்னப்
போதலர் குஞ்சி யாங்கோர்
     பூந்துணர் வடத்தின் வீக்கி
யோதிய மருங்கு றன்மே
     லொருகைவைத் தொருகை தன்னால்
மீதியல் வடகம் பற்றி
     வெண்ணகை 3நக்கு நின்றான்.
 
 

     (பாடம்)1 றோற்றி. 2 பெரியயாமுனம்கை. 3 நக்கி.