வார்த்தா என்னும் வடசொல் தமிழ் முறைப்படி ஆவீறு ஐயாயிற்று. பின்னே மதில் என்று வருதலின் புரிசை என்பதற்கு உறுப்புக்கள் என்று பொருள் உரைக்கப்பட்டது. இது தேவர் கூற்று. உரையை என்புழி ஐகாரம் அசை. உரை - செய்தி. |
( 1 ) |
வெள்ளிமலை |
120. | நிலவு வெண்சுடர் பாய்நில மொப்பநீண் டுலவு நீள்கட றீண்டியு யர்ந்துபோய் 1இலகு 2வின்மணி வானியன் மாடெலாம் 3விலக நின்றது விஞ்சையர் குன்றமே. |
(இ - ள்.) விஞ்சையர்குன்றம் - வித்தியாதரர்களுடைய வெள்ளி மலையானது; நிலவுவெள்சுடர் பாய்நிலம் ஒப்ப - திங்களின் வெள்ளிய ஒளி பரவப்பெற்ற தரையிடத்தைப் போல வெண்மையுடையதாய்; நீண்டு உலவு நீள்கடல் தீண்டி - நெடுமையை யுடையதாக உலாவுகின்ற நீண்ட கடலைச் சார்ந்து; உயர்ந்துபோய் - மேலோங்கிச் சென்று; இலகுவில்மணி வான் இயல் பாடு எலாம் - விளங்குகின்ற ஒளியையுடைய அழகிய விண்ணிற் பொருந்திய இடங்களெல்லாம்; விலகநின்றது - தன்னைக் கண்டு இடம்விட்டு விலகுமாறு பொருந்தி நின்றது. (எ - று.) வெள்ளிமலையாதலால் வெண்ணிறமாய் விளங்குதல்பற்றி, வெண்மையான நிலா வீசப்பெற்ற தரையிடம்போல உள்ளதென்றார் - உலவுதல் - அங்கும் இங்குமாகப் போதலும் வருதலும்; அலைகள் உலவப் பெறுதலின் உலவுநீள்கடல் என்னப்பட்டது. கடல்தீண்டி எனக் கண்ணழித்துக் கொள்ளின் வெள்ளிமலையின் வேர் கடலின்கீழ்க் கிடத்தலைக் குறித்து இங்ஙனம் கூறினார்என்க. இனி உலவு நீள் கடறு ஈண்டி எனக் கண்ணழித்துக்கொண்டு விலங்கினங்கள் உலவுதற்குக் காரணமான நெடிய காடுகள் செறியப்பெற்று என்று கூறினும் அமையும். கடறு - காடு. வெள்ளிமலையின் அடிப்பகுதியிற் காடுமிக்கிருத்தலுமுணர்க. நெடியமலைகளின் அடிப்பகுதி கடல்மட்டத்தின் கீழே நீண்டிருத்தலும் நினைக. வெள்ளி மலை வானத்தையளாவி விளங்குகின்றது. அதன் உயர்ச்சியைக் கண்டு தேவலோகத்தின் இடங்கள் விலகுகின்றன என்க. |
( 2 ) |
|
(பாடம்) 1. மலர. 2. மின்மணி. 3. விலகி நின்றது. |