பக்கம் : 981 | | அவ்வாறு வெல்வாய் எனின், அவ்வாதப்போர் காண்டற்கு இனிதே காண்! என அசதியாடி, அவ் விதூடகனோடே சென்று, பொழில் காவல் மகளிருடன் வரப் புகழான் பூம்பொழில் புக்கான் என்க. | (444) | விதூடகன் அப்பொழிலில் உதிரும் கனிகளைக் காண்டல் | 1575. | நீடு செம்பொன் முடியாற் 1கெதிர்நிந்தா வேட மேவிய 2விதூடக னோடி ஓடி யாடிவரு வானுயர் காவில் கூடி வீழ்வன கொழுங்கனி கண்டான். | (இ - ள்.) நீடு செம்பொன் முடியாற்கு எதிர் - நீண்ட செவ்விய பொன்னாலியன்ற முடியை உடைய திவிட்டனுக்கு முன்னர், நிந்தாவேடம் மேவிய விதூடகன் - நகைத்தற்குரிய வேடம் புனைந்துள்ள அவ்விகடப் பார்ப்பனன், ஓடிஓடி ஆடி வருவான் - அங்குமிங்கும் ஓடியும், ஆடியும் வருகின்றவன், உயர் காவில் - உயர்ந்த அப்பூம் பொழிலிலே, கூடி வீழ்வன - சேர்ந்து வீழ்வனவாகிய, கொழுங்கனி கண்டான் - கொழுவிய பழங்களைப் பார்த்தனன், (எ - று.) நம்பிக்கு முன்னர் அப்பொழிலிலே ஒடியாடி வருகின்ற விதூடகன் அப்பொழிலில் வீழ்ந்து குவிந்து கிடக்கும் கொழுங் கனிகனைக் கண்டான் என்க. நிந்தா வேடம் - ஒருவரைப் பழித்தற் பொருட்டுப் புனையும் வேடம் என்க. | (445) | | விதூடகனின் பேராசை | 1576. | கண்டு கண்டுதன கண்கனி தம்மேல் மண்டி 3மண்டிவர 4வாயெயி றூறக் கொண்டு கொண்டுகுவி யாவிவை காணாய் உண்டு முண்டுமென வோடி யுரைத்தான். | (இ - ள்.) கண்டு கண்டு - கனிகள் வீழுந்தோறும் பார்த்துப் பார்த்து, தன்கண் கனி தம்மேல் மண்டிமண்டி வர - தன்னுடைய விழிகள் அக்கனிகள் மேலே பாய்ந்து பாய்ந்து மீள்வனவாகவும், வாய் எயிறு ஊற - வாய் ஊறலெடுப்பவும், கொண்டுகொண்டு குவியா - அக்கனிகளைப் பொறுக்கிக்கொண்டு வந்து கொண்டுவந்து ஓரிடத்துக் குவித்து, ஓடி - அரசன்பாற் சென்று, இவை காணாய் - அரசே! இக்கனிகளைப் பார், உண்டும் உண்டும் என உரைத்தான் - இவையிற்றை யாம் தின்னுவோம் தின்னுவோம் என அவாவுடன் இயம்பினான், (எ - று.) | |
| (பாடம்) 1குடனாகி. 2விதூடகன் முன்னால். 3 மண்டிவர். 4 வாலெயி. | | |
|
|