பக்கம் : 982
 

     கனிகளைப் பார்க்குந்தோறும், அவன் கண்கள் அவற்றிற் சென்று சென்று வீழவும்,
எயிறூறவும், அவையிற்றைப் பொறுக்கிக்கொண்டு வந்து குவிக்கின்றவன், நம்பியை நோக்கி
இவற்றைக் காண்! யாம் இவற்றைத் தின்பேம்; என்றான் என்க.

(446)

 
1577. .நல்ல வல்லகனி முன்னைய 1நாமிவ்
வெல்லை செல்லவுறு மென்னலு 2மாயின்
வல்லை வல்லைவரு வாயென முன்னால்
ஒல்லை யொல்லையொலி பாடி நடந்தான்.
 
     (இ - ள்.) நல்ல அல்ல கனி முன்னைய - பார்ப்பனனே முன்னிடத்துளவாய
இக்கனிகள் அத்துணை நல்லன அல்ல, நான் இ எல்லை செல்ல - யாம் இவ்வெல்லையைக்
கடந்து சிறிது செல்லுமளவிலே, உறும் - ஆங்கு நறிய கனிகள் நனி கிடைக்கும், என்னலும்
- என்று அரசன் கூறியவுடனே, ஆயின் - அவ்வாறாயின், வல்லை வல்லை வருவாய் என
- அரசே விரைந்து விரைந்து வந்தருள்க என்று கூறி, முன்னால் - அரசனுக்கு முன்பு,
ஒல்லைஒல்லை - விரைந்து விரைந்து, ஒலிபாடி நடந்தான் - இசை பாடிக்கொண்டு
நடப்பானாயினன், (எ - று.)

     நம்பி, அக்கனிகளை நோக்கிப் பார்ப்பனனே! இவை நல்ல கனிகள் அல்ல; இன்னும்
சிறிது தொலை செல்வேமாயில், ஆண்டு நல்ல கனிகள் உளவாம்; என்ன, பார்ப்பனன்
அரசே! அங்ஙனமாயின், விரைந்து வந்தருள்க என்று விரைந்து பாடிச் சென்றான் என்க.
 

(447)

 
1578. சந்து மாவொடு தடாயிட மெல்லாங்
கொந்து தேனொடு குலாயிணர் கூடி
வந்து தாழ்ந்துமது மாரி தயங்கித்
தந்து தாதுபொழி யும்பொழி றானே.
 
     (இ - ள்.) சந்து மாவொடு தடாய் - சந்தன மரங்கள் மாமரங்களோடே வளைந்து,
இடம்எல்லாம் - அப்பொழிலிடம் எங்கும், கொந்து தேனொடு குலாய் - கூட்டமாகிய
வண்டுகளோடே பொருந்தி, இணர்கூடி - பூங்கொத்துக்களும் தழைக் கொத்துகளும் மிக்கு,
வந்து தாழ்ந்து - வளைந்து கீழே தணிந்து, மதுமாரி தயங்கி - தேன்மழை பொழிதலாலே
விளக்கமுற்று, பொழில் தான் - அப்பொழில், தாதுதந்து பொழியும் - பூந்துகள்களை
மிகுதியும் உதிர்க்கும், தான், ஏ : அசைகள், (எ - று.)

     தடாய் - வளைந்து.

     (பாடம்) 1 நாமிவை. 2 மாயின.