பக்கம் : 984
 

     குளிர்ந்த பொழிலிடத்தே ஓடி மண்டி வரும் வேதியன் ஒரு புறத்தே சிறந்த கனிகன்
உதிர்வன கண்டு அறியாமையாற் சினங்கொண்டான் என்க.
சினத்தற்குக் காரணம் வருகின்ற செய்யுள்களிற் காண்க.
மூடுகொண்ட மதி - அறியாமையுடையமதி.

(450)

 

விதூடகன் இப்பொழில் காவலில்லாதது எனல்

1581.  ஏவ லின்றியெரி வெங்கதி ரோனும்
போவ லென்றுநினை யாப்புனை கோயில்
ஓவ லின்றியுடை யாய்சிறி தேனுங்
1காவ லின்றுகடி காவிது வென்றான்.
 
     (இ - ள்.) ஏவல்இன்றி - உன்னுடைய ஏவல் பெற்றுச் செல்வதையன்றி,
எரிவெங்கதிரோனும் - எரிகின்ற வெவ்விய ஒளியையுடைய ஞாயிறும், போவல் என்று -
யாமே கடந்து செல்வேம் என்ற, நினையா - நினைவதில்லாத ஆணையமைந்த,
புனைகோயில் - அழகுறுத்தப்பட்ட வலிய அரண்மனையை, ஓவல் இன்றி உடையாய் -
ஒழிவின்றி உடையவனாகிய அரசனே, கடிகா இது - மணமிக்க இப்பூம்பொழில், சிறிதேனும்
காவல் இன்று என்றான் - ஒருசிறிதும் காவல் அமைந்ததாகக் காணப்படவில்லை என்று
கூறினான், (எ - று.)

     ஞாயிறும் உன்னுடைய ஆணையைக் கடந்து மேற்செல்ல அஞ்சும் அரண்மனையை
உடைய அரசே உன்னுடைய பூம்பொழில் மட்டும் காவலற்றதாக இருக்கின்றதே! என்றான்
என்க.

 (451)

 

நம்பி விதூடகனை வினாதல்

1582. பொன்னி னாயபுரி சைத்தள மேலும்
மன்னு வாளர்மற வோர்பலர் காப்பர்
என்னை 2காவலிஃ தில்வகை யென்றான்
மின்னு வார்ந்துமிளி ருஞ்சுடர் வேலோன்.
 
     (இ - ள்.) மின்னு வார்ந்து மிளிரும் சுடர் வேலோன் - மின்னல் ஒழுகித் திகழ்கின்ற
ஒளியுடைய வேலேந்திய திவிட்ட நம்பி, மன்னுவாளர் - கையிலே நிலைபெற்ற
வாட்படையுடையராய், பொன்னின் ஆய புரிசைத்தளம் மேலும் - பொன்னாலியன்ற
மதிலுறுப்பாகிய புரிசையின் மேற்றளத்தின்மேல் அமர்ந்து, மறவோர் பலர் காப்பர் -
மறத்தன்மைமிக்க காவலர் பற்பலர் காவா நிற்பாராகவும், இஃது - இப்பொழில், காவல்
இல்வகை என்னை - காவலிலதாய வகை யாது, என்றான் - என்று வினவினான், (எ - று.)
 
 

     (பாடம்) 1 காவினின்று கடி. 2 காவலிதுவில் வகை.