பக்கம் : 986
 

     அக்கருமுகக் கள்வர் யாண்டுளர் காட்டுக என்று நம்பி கூறலும், விதூடகன், ஆங்கு
மரங்களிலே உறைகின்ற கருமுகக் குரங்குகளைச் சுட்டிக் காட்டி, இவர்தாம் அக்கள்வர்
என்றானாக, நம்பியும், அஞ்சினான் போன்று, ஆ! அவர் கொடிய கள்வரே காண்!
இத்தகைய கள்வர் இப் பொழிலில் மிக்குளர்! ஆதலால் யாம் கள்வர் இலாத தேவியின்
பொழிலிடத்தே செல்வோம் என்றான், என்க.

(454)

 
1585. கள்வர் தாம்பல ரெனக்கடல் வண்ணன்
உள்வி ராவுநகை சேருரை கேட்டே
வெள்கி வேந்தனரு கேயிரு பாலும்
பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான்.
 
     (இ - ள்.) கடல்வண்ணன் - திவிட்டன், கள்வர் தாம் பலர் என - இப்பொழிலிடத்தே
பலர் கள்வர் உளர் என்று கூறிய, உள்விராவு நகைசேர் உரை கேட்டே - புறந்தோன்றாமல்
அகத்துள்ளே நகைப்புடன் கூடிய அசதியுரையை விதூடகன் கேட்டு, வெள்கி - அஞ்சி,
வேந்தன் அருகே - திவிட்டன் பக்கத்திலே நெருங்கி, இருபாலும் - இரண்டு
பக்கங்களினும், பள்கி நோக்குபு - வெருவிப் பார்த்துக்கொண்டு, பயிர்த்து - மனங்
கொளாதவனாய்க் கூசி, நடந்தான் - நடக்கலானான், (எ - று.)

     இப் பொழிலிடத்தே கள்வர் பலருளர் எனக் கேட்ட வேதியன், பெரிதும்
அஞ்சியவனாய், நம்பியை அணுகி, இருபுறமும் அச்சத்துடனே பார்த்துக் கூசி நடந்தான்
என்க.

(455)

 
வேறு
1586.  தாழ்தளிர் பொதுளிய தமால வீதியை
யேழைகண் டிருளென வெருள யாவதுஞ்
சூழிரு ளன்றிது சோலை காணென
வீழிணர்க் கண்ணியான் வெருவு நீக்கினான்.
 
     (இ - ள்.) தாழ் தளிர் பொதுளிய - தாழ்ந்த தழைகள் செறிந்த, தமால வீதியை -
பச்சிலை மரங்களிடையே செல்லும் வழியை, ஏழை கண்டு - அறிவில் ஏழையாகிய
விதூடகன் பார்த்து, இருள் என வெருள - இருள் என்று கருதி அஞ்ச, வீழ் இணர்க்
கண்ணியான் - விரும்பத்தக்க பூங்கொத்துக்களால் ஆய முடிமாலையை உடைய
திவிட்டமன்னன், யாவதும் சூழ் இருளன்று - எப்பொருளையும் சூழ்ந்து மறைக்கின்ற இருள்
அன்று, இது சோலை காண் என - இதுவும் பூம்பொழிலே காணுதி என்று தெருட்ட,
வெருவு நீக்கினான் - விதூடகன் அச்சம் தவிர்ந்தான், (எ - று.)