பக்கம் : 995 | | (இ - ள்.) திருந்திய மணி நகைத் தேவி - நிரல் படத்திருத்தப்பட்ட நித்திலக் கோவை போன்ற பற்களையுடைய சுயம்பிரபை, இவ்வழி - இவ்விடத்திற்கு, வருந்துணைப் பொழுதும் - வருமளவும், இம் மணிச் சிலாதலம் பொருந்தின - இம் மணிமேடையமைந்த, பொழில்நலம் - பூம்பொழிலின் அழகினை, காண்டும் என்று - யாம் காண்பாம் என்று கருதி, இருந்தனர் இருவரும் இனிதின் என்பவே - திவிட்டனும் விதூடகனும் இனிதாகத் தங்குவாராயினர் என்று அறிஞர் கூறுவர். அரோ: அசை, (எ - று.) கோப்பெருந்தேவி இவ்விடத்திற்கு வருந்துணையும், யாம் இப்பொழிலின் அழகினை நுகர்ந்து மகிழ்வேம், என நம்பியும் வேதியனும் இனிதாக இருந்தனர் என்க. | (471) | | கோப்பெருந்தேவி யப்பூம்பொழி லடைதல் | வேறு | 1602. | மின்னவிர் விளங்குமணி மேகலை நிழற்றப் பொன்னவிர் சிலம்பொலி 1பெயர்ந்துபுடை சாற்றக் கன்னியர் நிரந்துபலர் காவலொடு சூழ அன்னமென வந்தரசி யார்பொழி 2லடைந்தாள். | (இ - ள்.) மின் அவிர் விளங்கும் மணிமேகலை நிழற்ற - மின்னல் விரிந்து திகழ்கின்ற மணிமேகலை அணி ஒளிபரப்பவும், பொன் அவிர் சிலம்பு ஒலி பெயர்ந்து புடை சாற்ற - அழகு திகழ்கின்ற சிலம்பணி ஒலித்துப் பக்கத்தே ஆரவாரிப்பவும், கன்னியர் பலர் நிரந்து காவலொடு சூழ - உழைக்கல மகளிர் பலர் நெருங்கிப் புறங்காப்பாராய்த் தன்னைச் சூழ்ந்து வரவும், அரசி - கோப்பெருந்தேவியாகிய சுயம்பிரபை, அன்னம் என வந்து - அன்னப் புட்போன்று நடந்து வந்து, ஆர்பொழில் அடைந்தாள் - பொருந்திய அப்பொழிலை எய்தினாள், (எ - று.) அவ்வமயத்தே, கோப்பெருந்தேவி நிழற்றவும், புடைசாற்றவும், சூழவும், அன்னமென வந்து, அப்பொழிலை அடைந்தாள் என்க. | (472) | | சுயம்பிரபை வித்தையால் தன்னுருக்கரந்து நிற்றல் | 1603. | மாலையமர் சிந்தையொடு வார்பொழின் மருங்கின் வேலையமர் கண்ணிவிளை யாடுதல் விரும்பி 3மேலையமர் விஞ்சையின் மறைந்துவிரை நாறும் சோலையமர் தோகையென வேதொழுது நின்றாள். | |
| (பாடம்) 1 போந்துபுடை. 2 அடைந்தார்.3வேலையவர். | | |
|
|