பக்கம் : 998
 

     (இ - ள்.) உலத்தகைய தோள் அணிகொள் மார்ப - திரள் கல்லை ஒத்த
தோள்களையும் அணிகலன் பூண்ட மார்பினையும் உடையோனே, அசோகின் மிசை -
இவ்வசோக மரத்தின் மேலே, அலத்தக அடிச்சுவடு வைத்தாள் - தனது செம்பஞ்சுக்
குழம்பூட்டப் பெற்ற அழகிய அடிச்சுவட்டைப் பொறித்தவள், நிலத்தவள் கொல் -
இம்மண்ணுலக மடந்தையோ, அன்றி நெடுமால் வரையுளாள் கொல் - அல்லளேல் நீண்ட
பெரிய மலையகத்தே வதியும் அரமகளோ, உரையென - நீ ஆராய்ந்து கூறுக என்று
வினாவ, வலத்தகையன் ஆய மணி வண்ணன் மொழிகின்றான் - வன்மைத் தகுதியிற்
பெரியோன் ஆகிய திவிட்டன் கூறுகின்றான், (எ - று.)

     மார்ப! இவ்வசோகின் மிசைச் செம்பஞ்சுக்குழம்பின் பொறியுண்டாக அடியிட்டாள்,
மண்ணுலகமடந்தையோ? வரையரமகளோ? உரை என்றான், என்ன மணிவண்ணன்
மொழிகின்றான் என்க.

(476)

 

அவ்வடிச்சுவடு சுயம்பிரபையினது என்றெண்ணி,
அஃது ஒரு விச்சாதரியின் சுவடு எனல்

1607. செய்யன செறிந்தன திரண்டவிரல் சால
1ஐயதசை யார்ந்தவடி 2யின்னழகி னாலே
மெய்யுமறி வன்வினவில் விஞ்சையன்ம டந்தை
வையமுடை யாற்குரிய மாதரவ 3ளென்றான்.
 
     (இ - ள்.) வினவில் - பார்ப்பனனே நீ அவ்வாறு வினவுதியாயில் (கூறுவேன்), சால
ஐய தசையார்ந்த அடியின் - மிகவும் மெல்லிய தசை பொருந்திய இக்காலினது, விரல் -
விரல்கள், செய்யன - செவ்வியன, செறிந்தன - ஒன்றோடொன்று அழகுபட
நெருங்கியுள்ளன, திரண்ட - உருட்சியாய்த் திரண்டும் உள்ளன, அழகினாலே -
இச்சுவட்டைச் செய்த அடியின் அழகைக்கொண்டு கருதுமிடத்து, விஞ்சையன் மடந்தை -
இச் சுவட்டைச் செய்தவள் ஒரு விச்சாதரன் மகளே ஆவள், மெய்யும் அறிவன் - அவள்
யார் என்னும் உண்மையும் யான் அறிந்துள்ளேன், வையம் உடையாற்கு உரிய மாதர்
அவள் என்றான் - இவ்வுலகத்தை உடைய மன்னன் ஒருத்தனுக்கு உரியவளும் ஆவாள்
அவ்விஞ்சையள் என்றும் கூறினான், (எ - று.)

     அவ்வடிச்சுவட்டின் பேரழகாலே அது சுயம்பிரபையின் அடிச்சுவடு என ஊகித்தறிந்த
திவிட்டநம்பி அதனை வெளிப்படையாய்க் கூறாது குறிப்பாகக் கூறுகின்றான் என்க.
ஐய - அழகுடைய, அடியின் அழகாலே ஆராயுமிடத்தே, இவ்வடியிட்டாள் ஒரு
விச்சாதரமகளே! அவளும் ஒரு மன்னனுக்குக் காதலுரிமை பூண்டவள் ஆவாள் என்பதும்,
யான் அறிகுவல் என்று நம்பி கூறினான் என்க.

(477)


     (பாடம்) 1 ஐயதிசை. 2 வின்னழகி. 3 ள்கண்டாய்.