பக்கம் : 999
 
சுயம்பிரபை சினந்து உருவெளிப்படுத்துத் தோன்றல்
1608.  என்றலு மிரண்டுகரு நீலமலர்க் கண்ணும்
சென்றுகடை 1சேந்துசிறு வாணுதல் 2வியர்த்தே
அன்றரச னாவியுரு கும்படி யனன்று
மின்றவழு மேனியொடு தேவி 3வெளி நின்றாள்.
 
     (இ - ள்.) என்றலும் - என்று திவிட்டநம்பி கூறக்கேட்டவுடனே, தேவி - சுயம்பிரபை,
கருநீலம் மலர் இரண்டு கண்ணும் - நீலோற்பலமலர் விரிந்தாற் போன்ற தன் இரண்டு
விழிகளும், கடைசென்று சேந்து - கடைக் கண்வரை முழுதுறச் சினத்தாலே சிவப்ப, சிறு
வாள் நுதல் - சிறிய ஒளி பொருந்திய நெற்றி, வியர்த்து - வியர்த்துவிட, அன்று -
அப்பொழுது, அரசன் ஆவி உருகும்படி அனன்று - திவிட்டன் உயிரும் உருகிப் போம்படி
பெரிதும் வெகுண்டு, மின் தவழும் மேனியொடு - மின்னல்கள் தவழுகின்ற தன் திருமேனி
தோன்றும்படி, வெளிநின்றாள்-வெளிப்பட்டு நின்றாள், (எ- று.)

     திவிட்டன் மொழிகளை உருக்கரந்து அண்மையில் நின்று செவியுற்ற சுயம்பிரபை,
நம்பி அயலாள் ஒருத்தியைப் புகழ்வதாய்க் கருதிப் பெரிதும் சினந்து தன் உருவைத்
தோற்றி எதிர்ப்படுகின்றாள் என்பதாம்.

அவ்வாறு கூறிய நம்பியின் கூற்றாலே, தேவி, அவன் வேறு ஒரு விச்சாதரியைக்
குறித்துரைக்கின்றான் என்று கருதுபவளாய், நம்பியின் உயிர் உருகுமாறு சினந்து தன்
உருவினை வெளிப்படுத்து நின்றாள் என்க.

 (478)

 

சுயம்பிரபையின் சினங்கண்டு விதூடகன்
ஓடி மறைதலும் நம்பி திகைத்தலும்

1609. தாதிவர் கருங்குழலி தன்னைமுக நோக்கி
மாதவ னடுங்கிவளர் பூம்பொழின்ம றைந்தான்
காதலனு மங்குரிய கட்டுரை 4மறந்திட்
டேதமினி யென்கொல்விளை கின்றதென நின்றான்.
 
 

     (பாடம்) 1 சேந்த. 2 வியர்த்தாள். 3 வெளிப்பட்டாள். 4 மறைந்திட்டு.