(இ - ள்.) பண் அமை - எழுவகை இசைகளும் அமைந்த; நல்மகரம் யாழ் - நல்ல மகர வீணையைத் தாங்கிய; பனுவல் நூல்புலவர் பாடி - சிறந்த நூல்களை யுணர்ந்த புலவர்கள் பலவகைப் புகழ்ப்பாக்களைப் பாடி; விண் அகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகி - விண்ணின் கண்ணே விளங்குகின்ற திங்கள் மண்டலத்தைப்போன்ற ஒப்பற்ற வெண்கொற்றக் குடையின் நீழலிலே தங்கி; கண்அமர் உலகம் காக்கும் - இடமகன்ற உலகத்திலுள்ள உயிர்த்தொகைகளைப் பாதுகாக்கும்; நின் - உன்னுடைய; கழல்அடி - மறக்கழலையணிந்த அடிகள்; மண் அமர் வளாகம் எல்லாம் மலர்ந்த - மண் பொருந்திய வளைந்த உலகத்திலெல்லாம் பரவிய; புகழோடு ஒன்றி வாழ்க என்றார் - புகழோடு பொருந்தி வாழ்க என்று வாழ்த்துக் கூறினார்கள். (எ - று.) இச்செய்யுளிற் கூறப்பெறும் யாழ்ப்பனுவல் நூற்புலவர், எப்போதும் அரசன் மாட்டிருந்து அவன் புகழை யாழிலமைத்து இன்னிசையுடன் பாடும் இசைவாணர் என்க. பண் - நிறைந்த நரம்புகளையுடைய இராகம். பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என யாழ் நான்கு வகைப்படும். மகரயாழ் என்பது மகரமீனின் அங்காந்த வாய்போல வளைந்த நுனி அமைக்கப்படுதலால் மகரயாழ் என்று பெயர்பெற்ற தென்பர். யாழ்ப்புலவர் - வீணைப் பாடகர். வளாகம் - நீர்சூழ்ந்த இடம். |