(இ - ள்.) பண்களை மருட்டும் இன்சொல் பாவையை - இன்பத்தால் எம்மை ஒவ்வீர் எனப் பண்களை மயக்கும் இனிய சொற்களையுடைய சுயம்பிரபையின் எழிலை, பருகலுற்ற கண்கள் மருள - நுகரத்தொடங்கிய நுங்கண்கள் வியப்புறும்படி, நீர் - நீயிர், உம் கண்கள் என் கண்களாக - நும்முடைய கண்களை என்னுடைய கண்களாகக் கருதிக் கொண்டு, பெண்களை மருட்டும் சாயல் பேதையை - அழகிய மகளிர்களையும் வியப்புறுத்தும் சாயலுடைய சுயம்பிரபையை, காண்மின் என்று - யான் காணுமாப்போலே நன்கு விழிப்புடன் காணுங்கோளென்று, மண்களை மருட்டும்சீர் - மண்ணுலகங்களை இடம் போதாவென்று மருளச்செய்யும் புகழுடைய, நும் மாமியாரடிகள் சொன்னார் - உங்கள் மாமியாராகிய பெரியோர் எம்மிடம் இயம்பினார், (எ - று.) கண்களை - ஐ சாரியை. ஓவியந்தீட்டிய மாதவசேனை நங்கையை நோக்கி “நுங்கண்கள் என் கண்களாக நீயிர் பேதையைக் காண்மின்Ó என்று நும் மாமியாரடிகள் எமக்குச் சொன்னார் என்றாள், என்க. |