(இ - ள்.) ஆதலால் - அவ்வாறு இருத்தலால், மாது உலாம் சாயல் - அழகு உலவுகின்ற இனிய தோற்றமுடைய சுயம்பிரபையீர்!, அவர்க்குச் சொல்லும் - நுமது மாமியாரடிகட்கு யாம் சென்று இயம்பும், மாற்றம் ஒன்று அருளிச்செய் மின் என்ன - ஒரு வார்த்தை எமக்குக் கூறியருளுங்கோள்.என்று முன்னர்க் கூறிப் பின்னர், எங்கள் முன் மொழிய - உம் மாமியாரடிகட்கு நீவிர் கூறும் வார்த்தையை எங்கள்பால் இயம்புவதனால், ஆங்கு ஏதும் இல்லையன்றே -அவ்விடத்தே உண்டாகுமொரு குற்றமும் இல்லை அல்லவா, என்றாள் மாதவ சேனை என்பாள் - என்று மாதவசேனை என்பவள் கூறினாள், கோதிலாக்குணக் கொம்பன்னாள் -அழுக்கற்ற குணமுடைய பூஞ்கொம்பை யொத்த சுயம்பிரபையும் அது கேட்டு, குறுநகை முறுவல் கொண்டாள் - நுண்ணிதிற் புன்முறுவல் பூத்தாள், (எ - று.) ஆதலால், நும்மாமியாரடிகள் பால் நும்மொழியாக யாங்கள் கூற ஏதேனும் எம்பாற் கூறியருள்க; அவ்வாறு கூறுதலால் ஏதமிலதன்றே என்று மாதவ சேனை கூறினாள்; அதுகேட்டு நங்கை புன்முறுவல் பூத்தாள் என்க. |