1006.

பளிங்கியல் பலகை தன்மேற் பாவைய துருவந் தான்முன்
தெளிந்தவா றெழுதிக் கொண்டு செந்துகி லுறையின் மூடி
வளந்தரு கோயின் முன்னி மணிவண்ணற் பயந்த தேவி
அளந்தறி வரிய கற்பி னமிர்தனா ளருகு சேர்ந்தாள்.
 

     (இ - ள்.) பளிங்கு இயல் பலகை தன்மேல் - பளிங்காலியன்ற பலகையின்கண், தான்
முன் தெளிந்தவாறு - மாதவசேனை முன்னர்த் தன் உள்ளக்கிழியில் தெளிந்து
எழுதியவாறே, எழுதிக்கொண்டு - பொறித்து, செந்துகில் உறையின் மூடி -
அவ்வோவியத்தைச் செம்மை நிறமான துகிலாலாய உறையுட் செறித்துமூடி எடுத்துக்கொண்டு,
வளந்தரு கோயின் முன்னி - வளம்பொருந்திய அரண்மனையை எய்தி, அளந்து அறிவரிய
கற்பின் அமிர்தனாள் - கணித்தறிய வொண்ணாப் புகழுடைக் கற்புடையாளும், அமிழ்தம்
போன்ற குணநலம் உடையவளும், மணிவண்ணற் பயந்த தேவி - திவிட்ட நம்பியை ஈன்ற
கோப்பெருந்தேவியும் ஆகிய சசிதேவியின், அருகுசேர்ந்தாள் - பக்கத்தை அடைந்தாள்,
(எ- று.).

மாதவ சேனை சுயம்பிரபையின் ஓவியத்தைப் பலகையில் வரைந்து, பட்டுறையின்மூடி,
எடுத்துக் கொண்டு சசிதேவியின்பாற் சென்றாள் என்க.

(180)