இதுவும் அது

101.

மஞ்சுடை மலையின் வல்லி தொடரவான் வணங்க நின்ற
அஞ்சுடர்க் கடவுள் காத்த வருங்குல மலரத் தோன்றி
வெஞ்சுட ரெஃக மொன்றின் வேந்துகண் ணகற்றி நின்ற
செஞ்சுடர் முடியி னாய்நின் 1கோலிது செல்க வென்றார்.
 

     (இ - ள்.) மஞ்சு உடை மலையின் - முகில்களைத் தன்னிடத்தே கொண்ட
கைலைமலையில்; வல்லிதொடர - கொடிகள் தன்மேலே சுற்றிப் படரவும்; வான்
வணங்கநின்ற - விண்ணுலகத்தார் தன்னைப் பணியவும் தவஞ் செய்துநின்ற; அம்சுடர்க்
கடவுள்காத்த - அழகிய ஒளியையுடைய கதிரோனைப் போன்ற வாகுவலி என்னும்
அரசனால் வளர்க்கப்பட்ட; அருங்குலம் மலரத்தோன்றி - அரிய இவ்விக்குவாகு குலம்
விளங்கும்படியாகப் பிறந்து; வெம்சுடர் எஃகம் ஒன்றின் - வெவ்விய ஒளியையுடைய
வேற்படை யொன்றினாலே; வேந்துகண் அகற்றி நின்ற - பகையரசர்களை நாட்டை விட்டு
ஒழியச்செய்து நிலைபெற்ற; செம்சுடர்முடியினாய் - செம்மை யான ஒளிதங்கிய முடியுடைய
அரசனே! நின் கோல் இது செல்க என்றார் - உன்னுடைய இந்த அரசாட்சியானது மேலும்
இனிதாக ஓங்குக என்று வாழ்த்தினார்கள். (எ - று.)

     குலப்பெருமையையும் ஆற்றல் மிகுதியையும் எடுத்துச் சிறப்பித்துக் கூறிப்பாடிய
வாழ்த்து இது. வாகுவலி என்பவன் இட்சுவாகு குலத்துப் பேரரசர்களில் ஒருவன்.
காசிநாட்டரசனாகிய கச்சனுடைய மருமகன். இவன் வழியிற் பிறந்தவன் பயாபதி.
வாகுவலியின் வரலாறு தூதுவிடு சருக்கத்தில் கூறப்பெறும். வான் : விண்ணுலகத்தார்க்கு
இடவாகு பெயர்.

( 32 )