(இ - ள்.) அரச நம்பி - திவிட்டன், அப்படித்தாயிற் காண்பாம் என்றனன் - அத்தகைய அருங்கலம் உளதாயில் அதனை யான் பார்ப்பேன் என்று கூறினானாக, மைப்புடை நெடுங்கணாளும் - மையூட்டப்பட்ட பக்கங்களையுடைய நீண்ட கண்களையுடைய மாதவசேனையும் உடனே, மருங்கு நின்றவரை நீக்கி - பக்கத்தே நின்றவர்களை அகலப் போமாறு செய்து, கைப்புடைப் பலகை மேலாற் கன்னியது உருவம் காட்ட - தன் கையகத் ததாகிய பளிக்குப் பலகைமேல் வரையப்பட்ட சுயம்பிரபையின் ஓவிய உருவத்தைத் திவிட்டனுக்குக் காட்டாநிற்ப, மெய்ப்புடை தெரிய மாட்டான் - இது சுயம்பிரபையின் உருவம் என்னும் மெய்ப் பகுதியை அறியமாட்டாதவனாய், விருந்துகொள் மனத்தன் ஆனான் - மருட்கை யென்னும் மெய்ப்பாடு கொண்ட மனத்தையுடையவன் ஆனான், (எ -று.) புதுமை பெருமை சிறுமை ஆக்கம் என்னும் நான்கும் நிலைக்களனாகத் தோன்றும் மருட்கையாகலின் ஈண்டுப் புதுமைபற்றிப் பிறந்த மருட்கையை, விருந்தென்று கூறினார். |