1019.

கன்னிய துருவங் காளை காண்டலுங் 1கேடில் காமன்
பொன்னியல் கழலன் றாரன் 2பூட்டிய சிலைய னாகி
மன்னிய விற்கை நோக்கி மலரணி கணையு நோக்கித்
துன்னிய பொழுது 3நோக்கிச் சுடுசரந் 4தொடுக்க லுற்றான்.

     (இ - ள்.) கன்னியது உருவம் காளை காண்டலும் - சுயம்பிரபையின் திருவுருவத்தைத்
திவிட்டன் இவ்வாறு கண்டவுடனே, கேடு இல் காமன் - தன் தொழிலிற் கெடுதலில்லாது
வெற்றியே கொள்ளும் காமவேள் என்பான், பொன்னியல் கழலன் - பொன்னாலியன்ற
வீரக்கழல்களைக் கட்டியவனாய், தாரன் - மாலையை அணிந்தவனாய், பூட்டிய சிலையன்
ஆகி - நாண் ஏற்றிய வில்லையுடையவனாய்ப் போர்க்கோலம் பூண்டு, கை மன்னிய வில்
நோக்கி - தன் கையின்கட் பொருந்திய கரும்பு வில்லையும் நன்கு பார்த்து,
அணிமலர்க்கணையும் நோக்கி - அழகிய மலரம்புகளையும் நன்கு பார்த்து, துன்னிய
பொழுதும் நோக்கி - தன் செயலுக்கு ஏற்றதாய்ப் பொருந்தியுள்ள காலத்தையும் நன்கு
பார்த்து, சுடுசரம் தொடுக்கலுற்றான் - (சீர்த்தவிடமாதல் கண்டு கொக்கின் குத்தொக்க
விரைந்து) சுடுகின்ற அம்புகளை வில்லிற் றொடுத்து ஏவினான், (எ - று.)

( 193 )