வாயிற் காவலனுக்கு ஒரு கட்டளை

102. இன்னணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த வேந்தன்
பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி
என்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும்
கன்னவி 2றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான்.
 
     (இ - ள்.) இன்னணம் - இவ்வாறு; பலரும் ஏத்த - பலரும் புகழ்ந்து போற்ற;
இனிதின் - இனிமையாக; அங்கு இருந்த வேந்தன் - திருவோலக்க மண்டபத்தில்
அமர்ந்திருந்த அரசன்; பொன்அணி வாயில் காக்கும் - பொன்னாலியன்ற அழகிய
திருவோலக்க மண்டபத்து வாசலைக் காவல்செய்யும்; பூ கழல் அவனைநோக்கி -
அழகிய மறக்கழலையுடைய வாயில் காப்போனைப் பார்த்து; கல்நவில் தோளினாய் -
கல்லைப்போல் திண்ணியதென்று சொல்லத்தக்க தோளையுடையவனே!; நாழிகை ஏழுகாறும்
- இதுமுதல் ஏழு நாழிகை வரையிலும்; என்னவரேனும் ஆக - எவராக இருந்தாலும்; வர -
அவர்கள் தடையின்றி உள்ளே வருதற்பொருட்டு; நீ காவல்விடு - நீ நின் காவற்றொழிலைக்
கைவிடுக; என்றான் - என்று பணித்தனன். (எ - று.)

     காட்சிக்கெளியனாய், வலியரால் நலிந்து முறை வேண்டினார்க்கும், வறுமையால்
வருந்திக் குறை வேண்டினார்க்கும் மற்றையோர்க்கும் எளிதில் அருள் செய்ய விரும்பிய
அரசன் வாயிற்காவலனுக்கு இவ்வாறு கட்டளை யிட்டான். இங்ஙனம் யாவர்க்கும்
காட்சிக்கெளியனாதற் பொருட்டு ஒவ்வொரு நாளும் ஏழு நாழிகை வரையறை
செய்யப்பட்டமை இதனால் உணரலாம். இன்னணம் - இன்னவண்ணம் என்பதன் மரூஉ.
ஏனும் - எனினும் என்பதன் மரூஉ. காறு - அளவு குறிப்பதோ ரிடைச்சொல்.
 

 (33)