(இ - ள்.) மாகத்து மதியம் அன்ன - விசும்பின் கண்ணதாகிய பிறையை ஒத்த, வாள் நுதல்மடந்தை தன்னை - ஒளி பொருந்திய நெற்றியையுடைய சுயம்பிரபையின் ஓவியத்தை, ஆகத்துள் அடக்கி - தன் மார்பினுள் பொருந்த வைத்து, மன்னும் மணி நுதல் அழகுநோக்கி - நிலைபெற்ற மணியாலியன்ற சுட்டியினையுடைய நுதலின் அழகைக் கூர்ந்து பார்த்து, நாகத்தை நடுக்கும் அல்குல் - பாம்பின் படத்தை ஒத்த அல்குலையுடைய, நங்கைதன் திறத்து - சுயம்பிரபை பொருளாக எழுந்த, காம வேகத்தை - காமநோயின் கொடுமையை, வில்வலான் மெல்ல மெல்ல பெருக்கியிட்டான் - வில் வித்தையில் வல்லுநன் ஆகிய திவிட்டன் படிப்படியாய் மிகும்படி செய்து கொண்டான், (எ - று.) வில்வலான் - காமவேள் எனக்கொள்ளின், நோக்கி என்னும் எச்சத்தை நோக்க எனத் திரித்துக்கொள்க. சுயம்பிரபையின் ஓவியத்தைத் தன் மார்போடே சேர்த்து, நுதலின் அழகுநோக்கி நங்கை திறத்துத் தன்பால் எழுந்த காமவேகத்தை மிகுவித்தான் என்க. |