(இ - ள்.) அசைத்தது அந்துகில் - கட்டப்பட்டதாகிய அழகிய சேலை, ஓர் கை அவிழ்ந்து அசைகின்றது - ஒரு பக்கத்தே சிறிது நெகிழ்ந்து தளர்கின்றது, என்னும் - என்பான், பைந்தளிர் மேனி தன்மேல் - பசிய தளிர்நிறம் அமைந்த திருமேனியின்கண், பன்மணிக் கலங்கள் தீண்டும் - பல்வேறு மணிகளானியன்ற அணிகலன்களைத் தன்கையொற்றொடுவான், செந்தளிர் புரையும் மேனிச் சேயிழை திறத்தில் - செவ்விய தளிர்போன்ற திருமேனியையுடைய சுயம்பிரபையின் பொருட்டு, காம வெந்தழல் கனலமூட்டி - காமமாகிய வெவ்விய நெருப்பைக் கனன்று எரியுமாறு மூள்வித்துக்கொண்டு, வில்வலான் - வில்வல்லனாகிய திவிட்டன், மெலியலுற்றான் - வருந்துவானாயினான், (எ - று,) அவ்வோவியத்தில் துகில் ஒருசார் அவிழ்ந்தாற் போன்று வரைந் திருத்தலால் அவ்வாறு கூறினன் என்க. |