அந்திமாலையின் வருகை

1028.

கள்ளுலாங் நீத்துக் கருங்கயல் கவுளுட் கொண்டு
புள்ளெலாங் குடம்பை சேர்த்து பார்ப்பினம் புறந்தந் தோம்பி
யுள்ளுலா வுவகை கூரத் துணைபுணர்ந் தொலித்து வைக
வள்ளலார் மனத்துக் கெஃகாய் மாலைவந் திறுத்த தன்றே.

     (இ - ள்.) கள் உலாம் கழனி நீத்து - தேன் பாய்கின்ற வயல்களைவிட்டு, கருங்கயல்
கவுளுட்கொண்டு - குஞ்சுகளின் பொருட்டுக் கரிய கயல் மீன்களைத் தம் கவுளின் உள்ளே
அடக்கிக்கொண்டு, புள்ளெலாம் - பறவைகள் எல்லாம், குடம்பை சேர்ந்து - தத்தம்
கூடுகளிலே புகுந்து பார்ப்பினம் - தத்தம் குஞ்சுக்கூட்டங்களை. புறந்தந்து ஓம்பி
பாதுகாத்தலைச் செய்து, உள்உலா உவகை கூர - உள்ளத்தே நிறைகின்ற மகிழ்ச்சி
மிகும்படி, துணைபுணர்ந்து - தத்தம் காதற் றுணையோடு புணர்ந்து, ஒலித்துவைக -
ஆரவாரித்து இருப்பனவாக, வள்ளலார் மனத்துக்கு எஃகாய் - வள்ளன்மையுடைய திவிட்ட
நம்பியின் உளத்தைக் குத்திப் புண் செய்யுமொரு வேற்படையாக, மாலை வந்திறுத்ததன்றே
- மாலைக்காலம் உலகிலே வந்தது, அன்றே : அசை, (எ - று.)


எஃகு - ஈண்டு வேல். பறவைகள் திறத்தின் இங்ஙனம் ஆய மாலை வள்ளலார் திறத்து
இங்ஙனமாயிற்று என்க.

( 202 )