நிமித்திகன் வரவு | 103. | ஆயிடை யலகின் மெய்ந்நூ லளவுசென் றடங்கி நின்றான் சேயிடை நிகழ்வ தெல்லாஞ் சிந்தையிற் றெளிந்த நீரான் மேயிடை பெறுவ னாயின் வேந்துகாண் 1குறுவன் கொல்லோ நீயிடை 2யறிசொல் லென்றோர் நிமித்திக னெறியிற்சொன்னான். | (இ - ள்.) அ இடை - அச்சமயத்தில்; அலகு இல் மெய் நூல் அளவு சென்று அடங்கி நின்றான் - எண்ணிறந்த உண்மை நூற் பொருள்களையும் அவை கூறுமளவும் கற்றுணர்ந்து மேலும் அவற்றிற்கேற்ப அடக்கத்தை மேற்கொண்டு நிற்பவனும்; சேய்இடை நிகழ்வது எல்லாம் - தொலைவிலும் அண்மையிலும் நிகழ்பவைகளை யெல்லாம்; சிந்தையில் தெளிந்த நீரான் - உள்ளத்தில் தெளிவாக அறிந்த தன்மையுடையவனும் ஆகிய ஓர் நிமித்திகன் - முக்காலங்களையும் உணரும் அறிவினையுடையான் ஒருவன்; மேய் - அங்கு வந்து; இடைபெறுவன் ஆயின் - இப்பொழுது உன்னுடைய உடன்பாடு பெற்று உள்ளே செல்வேனாயின்; வேந்து காண்குறுவன் கொல்ஓ - அரசன் என்னைக் காண்பானோ?; நீ இடை அறிசொல் - நீசென்று செவ்வியறிந்து வந்து தெரிந்து சொல்வாயாக; என்று நெறியில்சொன்னான் - என்று முறைப்படி கூறினான். (எ - று.) “அறிவோர்க்கழகு கற்றுணர்ந்தடங்கல்“ ஆதலின் 'அலகின் மெய்ந்நூ லளவு சென்றடங்கி நின்றான்' என்றார். அளவும் என்னல் வேண்டிய முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. செல்லுதல் அறிதல் என்னும் பொருளது. நிமித்திகன் என்னும் வடசொல்லுக்குப் பொருள் குறிகாரன் என்பது. குறிகாரன் அரசர்கட்கு உறுதிச் சுற்றத்துள் ஒருவனாவன். இங்கு வந்துள்ள குறிகாரனுடைய பெயர் அங்கதன் என்பது தூதுவிடு சருக்கத்தால் பெறப்படும். | (34) | | |
|
|